பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

செய்தித்தாள்களிலும் – ஊடகங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் பற்றிய துயரச் செய்திகள் வெளியாகி கண்களைக் குளமாக்கி, மனதை ரணமாக்கிவிட்டது.

சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா. மற்றும் மேலை நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க, அவர் 2009-ஆம் ஆண்டு மே 19-ஆம் நாள் காலை 7.30 மணி அளவில் ஐந்து மெய்க்காப்பாளர்களோடு சென்று ராணுவத்திடம் சரணடைந்துள்ளார். பாலகன் பாலச்சந்திரனுடன் சென்ற ஐந்து பாதுகாப்பாளர்களையும் தனித்தனியே சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவத்தின் “53-ஆவது படையணி’ இறுதியாக, 12 வயதே ஆன பாலச்சந்திரனையும் விட்டு வைக்கவில்லை.

அவ்விதம் சரணடைந்த பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் உண்ணக் கொடுத்துவிட்டு, நிதானமாகத் தமது உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டுள்ளார்கள். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபட்சவைத் தொடர்புகொண்டு, அவரது ஆலோசனையின் பேரில் பாலச்சந்திரனைச் சுட்டுக் கொன்றுவிட்டனர். அதுமட்டுமல்லாமல், மேலே போட்டிருந்த சட்டையையும் கழற்றி ஒரு லுங்கியை மட்டும் போர்த்திக்கொள்ளக் கொடுத்து, அப்பாவியாகக் காட்சியளிக்கும் பாலச்சந்திரனைக் கொல்ல எந்தக் கொடியவனுக்கும் மனது வராது எனும்போது, “சிங்களக் காடையர்க்கு’ எப்படித்தான் மனது வந்ததோ தெரியவில்லை.

சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட விவரங்களை இலங்கை ராணுவத்தினரிடமிருந்து தப்பி வந்து, பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை ராணுவத்தினர் இருவர் உறுதி செய்தனர். இவர்களது கூற்றை ஆதாரமாகக் கொண்டுதான், “”யுத்த சூனியப் பிரதேசம்” என்ற ஆவணப்படத்தை “சேனல்-4′ தயாரித்துள்ளது. “சேனல்-4′ தொலைக்காட்சி இதற்கு முன்னர், “”சட்டத்துக்குப் புறம்பான கொலை”, “”கொலைக்களங்கள்” போன்ற ஆவணங்களை வெளியிட்டிருக்கிறது.

இதன் தயாரிப்பாளர் 53 வயதான கலாம் மேக்ரே, ஸ்காட்லாந்தில் எடின்பரோவில் பிறந்து, நைஜீரியாவில் வாழ்ந்தவர். எடின்பரோ கல்லூரியில் பயின்று, ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

இவர் போஸ்னியா, அல்ஜீரியா, பாலஸ்தீனப் பிரச்னைகள் குறித்து ஆவணப் படங்களைத் தயாரித்தவர். மனித உரிமை ஆர்வலர் மட்டுமல்லாது, எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ, அங்கெல்லாம் சென்று பிரச்னைகளைப் பற்றி ஆய்வு நடத்துபவர். இந்நிலையில் ஈழத் தமிழர் பிரச்னையில் இவரது கவனம் திரும்பியது. இதற்கு நண்பர் “அதிர்வு’ கு. கண்ணனின் நட்பு காரணமாக அமைந்தது.

உலகிலேயே மிகவும் மோசமான ஈழ இனப்படுகொலையை எப்படி “சேனல்-4′ விடியோ காட்சிகள் மூலம் உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவது என்று இவர்கள் இருவரும் விவாதித்து அதன்படி தொடுக்கப்பட்டவைதான் இந்த ஆவணப் படங்கள்.

அதற்கு சோபி, மேரி கொல்வின் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் உதவியாக இருந்தனர்.

இதே காட்சிகள் சர்வதேச தொலைக்காட்சிகளான சி.என்.என்., பி.பி.சி., “அல்-ஜஸீரா’ ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டன. இந்தப் படங்களைத் தொகுக்கும்போதே இந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் கலாம் மேக்ரே மிகவும் வேதனையுடன் தொகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கலாம் மேக்ரே தொகுத்த முதல் பகுதி “சேனல்-4′ மூலம் உலக அளவில் அனைவருக்கும் காட்டப்பட்டது. பல்வேறு நாட்டினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அதை வேதனையோடு பார்த்து, மனிதாபிமானமற்ற ஒரு பிரச்னையை வெளிஉலகுக்குக் கொண்டு வந்தமைக்கு மேக்ரேவுக்கு நன்றி தெரிவித்தனர். வெளிநாடுகளில் வந்து தஞ்சமடையும் இலங்கை ராணுவத்தினர் கொடுக்கும் படங்கள், ஆதாரங்கள், வாக்குமூலங்களைக் கொண்டு தயாரிக்கப்படவைதான் இவர் வெளியிடும் ஆவணப்படங்கள். தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள், புகைப்படங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திய பிறகுதான் படக்காட்சியினை வெளிக் கொணர்வார்கள். இதற்காகவே மேக்ரே இலங்கைக்கும் நேரடியாகச் சென்று வந்தார்.

கலாம் மேக்ரே வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல், இந்தக் கோர காட்சிகள் குறித்து பல தொழில்நுட்ப வல்லுநர்கள், தடய அறிவியல் நிபுணர்களிடமும் விவரங்களை அறிந்து, இறுதியில் ஒரு தடய அறிவியல் நிபுணராக ஆனவர்.

இலங்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அங்கே வாழ முடியாது என்கிற நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் லண்டனில் “ஜே.டி.சி.’ எனும் ஓர் அமைப்பை ஆரம்பித்தார்கள். அவர்கள் மூலமாகவும் போர்க்குற்ற விடியோ காட்சிகள் “சேனல்-4′-க்குச் சென்றன. “ஜே.டி.சி.’ மூலம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களையும் “சேனல்- 4′ படக்காட்சியில் இணைத்தனர்.

குறிப்பிட்ட இந்த ஆதாரக் காணொளிகள், “கொலைக்களங்கள்’ என்ற “சேனல்-4′ ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து, வரும் மார்ச்சில் “சேனல்-4′-இல் ஆவணக் காணொளியின் மூலம், “”நோ ஃபயர் úஸான் (யுத்த சூனியப் பிரதேசம்)” என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது. இந்தக் காணொளியில்தான் பாலச்சந்திரன், ஐந்து துப்பாக்கி ரவைகளுக்குப் பலியாகிடும் கோரமான காட்சி இடம்பெற உள்ளது.

இத்தருணத்தில், இக்காணொளிக் காட்சிகள், ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரும் தீர்மானத்திற்கு மேலும் வலு சேர்க்கும். மேற்கு உலக நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தின்மீது அழுத்தம் கொடுக்க, இந்த விடியோ காட்சிகள் உதவும்.

ஈழத்தமிழர்கள் எல்லா நாட்டின் ஆதரவையும்விட, இந்தியாவின் ஆதரவுதான் மிக முக்கியம் என்று கருதுகிறார்கள். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், 2009-இல் நடந்த போர்க்குற்றங்களையும் – மனித உரிமை மீறல்களையும் பிரதான விவாதப் பொருளாக கொண்டிருக்கும். இதற்கிடையில், “சுதந்திரமாகச் செயல்படும் சர்வதேச விசாரணைக்குழு’ மூலம் இலங்கையை விசாரித்திட வேண்டுமென்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

போர்க் குற்றவாளிக் கூண்டில் இலங்கை அதிபர் ராஜபட்ச நிறுத்தப்படும்போது, அதற்கு அடிப்படை ஆதாரம்தான் இந்த “சேனல்-4′ படக்காட்சிகள், விடியோக் காட்சிகள். இவ்வளவு உண்மை நிகழ்வுகள் இருந்தும் “சேனல்-4′ விடியோ காட்சிகளை இலங்கை அரசும், இலங்கை ராணுவ அதிகாரிகளும் மறுப்பதன் காரணம் தங்களது குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது என்பதால்தான்.

ஜெனிவா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளது. இந்தத் தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் எல்லாம் ஆதரிக்கின்றன. இந்த நிலையில் இந்தியா அதன் நிலைப்பாடடினை இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்காமல் இருப்பது நம்மையெல்லாம் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

இலங்கை அரசுக்கு இந்திய அரசு இனியும் துணைபோக வேண்டுமா என்பது தமிழக மக்களிடையே கேள்விக்குறியாக எழுந்துள்ளது. எனவே, இலங்கை அரசாங்கத்தின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வரும்போது, இந்திய அரசு அந்தக் கருத்துக்கு வலு சேர்த்திட முன்வர வேண்டுமே தவிர, இலங்கை அரசைக் காப்பாற்றிட முயற்சி செய்யக் கூடாது.

“பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பது இலங்கையுடன் நிற்கட்டும். அகிம்சையின் அடையாளங்களாக உலகம் போற்றும் புத்தர் பெருமானையும், காந்தி அடிகளையும் ஈன்ற இந்தியாவுக்கும் அப்படி ஓர் அவமானம் வந்துவிடக் கூடாது. கொலைவெறிக்கும், இனப்படுகொலைக்கும் துணைபோனவர்கள் என்று உலக சரித்திரம் இந்தியாவை ஏளனப் பார்வை பார்க்க அது காரணமாகி விடும்.

Leave a Reply

Your email address will not be published.