ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள வர்தாக் மற்றும் லோகர் ஆகிய 2 மாநிலங்களில் இருந்து அமெரிக்க சிறப்பு ராணுவம் வெளியேறும்படி அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.
இங்குள்ள மக்கள் மீது அந்த ராணுவ வீரர்கள் கடும் தாக்குதல்கள் நடத்தி தொந்தரவு கொடுப்பதால் அவர்கள் அங்கிருந்து இன்னும் 2 வாரத்தில் வெளியேற வேண்டும் என தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவ வீரர்களால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு, ஸ்திரதன்மை இல்லை. கடும் துன்பங்களுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். இந்த தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் அய்மல்பைசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவம் செய்தி தொடர்பாளர் கூறும்போது, இக்குற்றச்சாட்டு அறிக்கையை பார்த்தபிறகு இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் விவாதிக்கப்படும். அனைத்து குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் எடுத்து கொண்டு தீவிரமாக ஆராயப்படும் என்றார்.