தென் கொரியாவின் முதல் பெண் அதிபரானார், பார்க் கியூன்-ஹைக்

தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன்-ஹை (61) திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பின்னர் துவக்க உரையாற்றிய அவர், வடகொரியா உடனடியாக அணு ஆயுத சோதனையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைநகர் சியோலில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு கூடியிருந்த சுமார் 70,000 மக்கள் முன்னிலையில் பார்க் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக, ராணுவம் சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய துவக்க உரையில் கூறியதாவது:

சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு, வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை கொரிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு மக்களின் உயிருக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எத்தகைய நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ள முடியாது.

எனவே, அணு ஆயுத சோதனை நடத்தும் முயற்சியை வடகொரியா உடனடியாகக் கைவிட வேண்டும். குறிப்பாக, அந்த நாடு சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

அதே நேரம், தேர்தல் வாக்குறுதிப்படி வடகொரியாவுடனான உறவை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றார் பார்க்.

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி, பிப்ரவரி 12ஆம் தேதி 3ஆவது முறையாக அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியது. சர்வதேச நாடுகள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

பொருளாதார ரீதியாக ஆசியாவின் 4ஆவது பெரிய நாடான தென் கொரியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பார்க், 50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தை பார்க் சுங்-ஹீ வகித்த பதவியை எட்டிப் பிடித்துள்ளார். சர்வாதிகாரியான ஹீ ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர்.

தொடர்ந்து 18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஹீ கொலை செய்யப்பட்டார். நாட்டை வறுமைப் பிடியிலிருந்து விடுவித்த பெருமை அவருக்கு உண்டு. என்றாலும், அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

Leave a Reply

Your email address will not be published.