Search

பச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே-புகழேந்தி தங்கராஜ்!

சர்வதேசத்தின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது அந்தப் புகைப்படம். தான் உட்கார வைக்கப்பட்டிருக்கிற பங்கரிலிருந்து மூன்றடி தூரத்தில் மரணம் நிற்பதைக்கூட அறியாமல் சுடப்போகிறவனே தனக்குக் கொடுத்த பிஸ்கட்டை வெள்ளந்தியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்தக் குழந்தையின் முகம் மனசாட்சி உள்ள எவரையும் உண்ண விடாது உறங்க விடாது.

அந்தக் குழந்தையின் தந்தைதான் இன்றும் என்றும் கோடானுகோடி தமிழரின் பெருமைக்குரிய அடையாளம். மானத்தோடு வாழ எங்கள் இனத்துக்குக் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதனின் குழந்தை நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் அடையாளமாக சர்வதேசத்தாலும் பார்க்கப்படுகிறான் இன்று.

பாலச்சந்திரா! பிரபாகரன் என்கிற இணையற்ற தலைவனின் இளைய மகனே! ஒட்டுமொத்த உலகத்தையும் குமுறவைத்திருக்கிறது உன்னுடைய படுகொலை. எங்கள் விழிகளில் வழியும் கண்ணீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு உன் விழிகளைப் பார்க்கிறோம். இந்த அப்பாவித்தனமான பார்வையைப் பார்த்தபிறகும் உன்னை நோக்கித் துப்பாக்கியை நீட்டினார்கள் என்றால் அவர்கள் மனிதப் பிறவிகளாக இருக்க வாய்ப்பேயில்லை. சுட்டுக் கொன்ற சிங்கள அதிகாரிகள் மட்டுமல்ல…. சுடச் சொன்ன ராஜபட்சே சகோதரர்கள் கூசாமல் இவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் ரத்தவெறி பிடித்த பௌத்த பிக்குகள்இ இவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவின் இறையாண்மையிலிருந்து ஆண்மை என்கிற பதத்தையே நீக்கிவிட்ட இந்திய நபும்சகர்கள் இலங்கை போடுகிற மெட்டுக்கேற்ப பாட்டு எழுதிக்கொண்டிருக்கும் பான் கீ மூன்கள் – இவர்களில் எவருமே மனிதரில்லை.

அன்பையும் அகிம்சையையும் உலகுக்குப் போதித்தவன் புத்தன். அவனது மதத்தைப் பரப்ப இந்தியாவிலிருந்து தமிழரின் தாய்மண்ணுக்குச் சென்றவர்கள் இந்த பௌத்த வெறியர்கள். தங்கள் மதத்தைப் பரப்பியதோடு நில்லாமல் அங்கே காலங்காலமாக இருந்துவந்த சைவ மரபை அழித்து ஒழித்ததில் ஆரம்பித்தது புத்தர்களின் அராஜகம். சைவ வழிபாட்டுத் தலங்களை மட்டுமல்லாது வழிபடுபவர்களையும் சேர்த்து அழிப்பது என்கிற அளவுக்குச் சென்றது அவர்களது அகிம்சாநெறி. இனவெறி மதவெறி – என்கிற நிலைகளைக் கடந்து கொலைவெறியோடு திரிந்தது பௌத்தம். இந்தக் கொலைவெறியர்களிடமிருந்து தமிழினத்தைக் காக்கத்தான் ஆயுதம் ஏந்தினார்கள் இளைஞர்கள். அதைக்கூட அவர்கள் தீர்மானிக்கவில்லை. இலங்கைதான் அவர்கள் மீது ஆயுதங்களைத் திணித்தது. கா.சிவத்தம்பி சொன்னதைப் போல் அந்த இளைஞர்கள் மீது போரையும் திணித்தது இலங்கை.

பிணவெறி இலங்கைக்கு வெட்கமேயில்லாமல் வக்காலத்து வாங்குகிற அரைவேக்காட்டு சுவாமிகளுக்கு இதெல்லாம் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயமாகத் தெரியும். தெரிந்தே அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றால் கொடுக்கிற கூலிக்குக் குறைவில்லாமல் குரைக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன பொருள்! இவர்கள் மட்டுமில்லை…. இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவர்கள் இலங்கை தொடர்பான விவகாரங்களை இந்திய வெளியுறவுத் துறையில் கையாண்டவர்கள் ஒரு அமைதிப் படையையே சாத்தானின் சேனையாகத் திசை திருப்பியவர்கள் இதற்கெல்லாம் பின்னணியாயிருந்த அயோக்கிய அரசியல் எஜமானர்கள் – என்று பல்வேறு தரப்பினரின் அசைகிற சொத்துக்களையும் அசையாத சொத்துக்களையும் 1984ம் ஆண்டுமுதல் விசாரணைக்கு உட்படுத்துவது தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவின் இறையாண்மைக்கும் நல்லது (அப்படி ஒன்று உண்மையாகவே இருக்கிற பட்சத்தில்)!

உள்ளத்தை உறையவைக்கும் பாலச்சந்திரன் படுகொலை ஆதாரத்தைப் பார்த்தவுடனேயே கடுமையான வார்த்தைகளால் கண்டித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. மனிதத் தன்மையற்ற செயல் – மன்னிக்க முடியாத மாபெரும் போர்க்குற்றம் – இலங்கையில் நடப்பது ஹிட்லரின் ஆட்சி – என்றெல்லாம் சாடியிருக்கிறார் முதல்வர். ஒட்டுமொத்த தமிழினத்தின் கோபத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தன அந்த வார்த்தைகள்.

‘இலங்கையில் நடந்திருப்பது திட்டமிட்ட இனப்படுகொலை’ என்று அழுத்தந் திருத்தமாக முதல்வர் கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. யூதர்கள் என்பதற்காகவே நாஜி ஜெர்மனி அவர்களைக் கொன்று குவித்ததைப் போல் தமிழர்கள் என்பதற்காகவே ஈழத் தமிழ் மக்கள் இலங்கையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜெர்மனியில் ஹிட்லர் செய்த இனப்படுகொலையையையே விஞ்சும் அளவுக்கு இலங்கையின் இனப்படுகொலை இருக்கிறது – என்கிற ஜெயலலிதாவின் வாதம் மன்மோகன் அரசின் செவுளில் அறையும் என்பது நிச்சயம்.

கண்டித்ததோடு நின்றுவிடாதுஇ இந்தியா என்ன செய்யவேண்டும் என்று விளக்கியும் இருக்கிறார் ஜெயலலிதா. ‘அமெரிக்காவுடனும் உலக நாடுகளுடனும் பேசி இலங்கைமீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவர இந்தியா முன்வரவேண்டும். சிங்களருக்கு இணையான மரியாதையுடன் தமிழர்கள் வாழும் நிலை வரும்வரை பொருளாதாரத் தடை நீடிக்கவேண்டும்’ என்று முதல்வர் கூறியிருப்பது மன்மோகன் கவனத்துக்கு அடுத்த நொடியே போய்ச் சேர்ந்திருக்கும்.

உலகத்தையே உலுக்குகிற மாதிரி இன்னும் நூறு ஆதாரங்கள் வெளியானாலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் அசையமாட்டார் போல் தெரிகிறது. என்ன செய்வது… நாட்டு நிர்வாகம் அவர்களுடைய பாக்கெட்டில் இருக்கிறது. போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாம். கூசாமல் பேசுகிறார் குர்ஷீத். நடந்தது இனப்படுகொலை என்பதை மூடிமறைக்க ‘போர்தான் நடந்தது’ – என்று அளக்கும் குர்ஷீத் அகில உலகப் புளுகர்கள் ‘அறக்கட்டளை’யை உருவாக்கி வியாபாரத்தை விருத்தி செய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

சல்மானுக்கு ஏற்ப ஜலதரங்கம் வாசிக்காவிட்டால்இ கொள்கைக் கூட்டணியில் எப்படி கோபாலபுரம் நீடிக்க முடியும்? பாலச்சந்திரன் படுகொலையைப் பார்த்து உறைந்துபோனாராஇ உருகினாரா என்பதையெல்லாம் தெரிவிக்காவிட்டாலும் – ‘கொடுமை கொடுமை… இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது’ என்று விசனம் பேசினார் வசனகர்த்தா.

விசனத்தோடு விட்டுவிட முடியுமா திருவாளர்.சரணாகதியால்! ஒருதுளி விஷத்தையாவது அந்தக் கண்ணீர் வெங்காயத்தில் கரைக்காவிட்டால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும் அவரால்? ‘சேனல் 4 வெளியிட்டிருப்பதைப்போல் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தாலும் போரின்போது கொல்லப்பட்டிருந்தாலும் அது கொலைதான்!………. ராஜபட்சே ஒரு போர்க் குற்றவாளி. போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படவேண்டும் – என்று ஐ.நா. நிபுணர்குழு தெரிவித்திருக்கிறது’ என்று சந்தடி சாக்கில் ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தையைப் பக்குவமாகப் பரிமாறுகிறார்.

உலகே சொல்கிறது – ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை – என்று! திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறார் தமிழக முதல்வர். இதெல்லாம் கோபாலபுரத்து கற்சிலைக்குத் தெரியாதா! கற்பழித்துக் கொல்வதை இலங்கை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தியது – என்கிற சர்வதேசத்தின் குற்றச்சாட்டு அதன் காதுகளில் விழவேயில்லையா? ‘பிஸ்கெட் சாப்பிட்டுமுடி.. அப்புறம் சுடுகிறோம்’ என்று காத்திருந்து கொன்றிருக்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள். அதற்குப் பிறகும் ‘நடந்தது இனப்படுகொலை’ என்று வாயைத் திறக்காமல் ‘போர்க்குற்றம்’ என்று பிலாக்காணம் வைக்கிறார்களே ‘கொடுமை… கொடுமை…. இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது!’
இனப்படுகொலை-யை மூடிமறைக்க முயற்சிக்கும் மோடி மஸ்தான்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தடாலடியாக ஆசிய தடகளப்போட்டிகளில் இலங்கை பங்கேற்பதால் தமிழகத்தில் அதை நடத்த முடியாது – என்று கைவிரித்திருக்கிறார். கோபாலபுரம் மார்க்கெட்டின் வெண்டைக்காய் வியாபாரம் போல் இல்லாமல் திட்டவட்டமாகச் சிதறுதேங்காய் விடுகிறது போயஸ் கார்டன்.

மணிசங்கர் அய்யர்இ மணிசங்கர் அய்யர் என்று ஒரு மனிதர் இருப்பதே இப்படி ஏதாவது நடந்துவிடும்போது தான் நினைவுக்கு வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் அவர். ஜெயலலிதாவின் அறிவிப்பு பற்றி யாரோ அவரிடம் அபிப்பிராயம் கேட்டுவிட்டார்கள். கேட்டபிறகு பதில் சொல்லாவிட்டால் அந்தப் பதவிப் பெருங்காய டப்பாவின் பவிசு என்ன ஆவது? ‘இதை ஜெயலலிதா முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும்’ என்று ஆரம்பித்து ‘தான் நினைப்பதை எல்லாம் செய்கிறார் ஜெயலலிதா’ என்று முடித்திருக்கிறார் அய்யர்.

இலங்கை அணி பங்கேற்றால் தமிழ்நாட்டில் போட்டியை நடத்தமுடியாது என்பதை போட்டியை நடத்தும் அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் ஏற்கெனவே தெரிவித்தும் எந்தப் பதிலும் இல்லை – என்று முதல்வர் குற்றஞ்சாட்டி இருப்பது மணிசங்கரின் பார்வையில் படவேயில்லையா?

முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும் – என்று சொல்வதற்கான தகுதி அய்யருக்கு மட்டுமில்லை காங்கிரஸில் எவருக்குமே இல்லை. கசாபைத் தூக்கில் போடுகிற விஷயத்தை மன்மோகன்சிங்குக்கே கூட முன்னதாகச் சொல்லவில்லை உள்துறையின் சிண்டைத் தன் பிடியில் வைத்திருக்கிற ஷிண்டே. எதையோ குளிப்பாட்டி எங்கேயோ வைப்பது மாதிரி ஆண்டு தோறும் அழைத்துவருகிறார்கள் ராஜபட்சேவை. அந்த மிருகம் எப்போது வருகிறது எங்கெங்கே செல்கிறது என்பதைக்கூட முன்கூட்டித் தெரிவிப்பதில்லை. ஜெயலலிதா மட்டும் எல்லாவற்றையும் முன்னதாகவே தெரிவித்துவிடவேண்டும் என்று எப்படி இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ‘தான் நினைப்பதை எல்லாம் செய்கிறார் ஜெயலலிதா’ என்பது அய்யரின் புகார். தங்களை மாதிரியே ஜெயலலிதாவும் – ராஜபட்சே நினைப்பதைத்தான் செய்யவேண்டும் – என்று ஆசைப்படுகிறாரா அய்யர்! இன்றுவரை மணிசங்கரிலிருந்து சிதம்பரங்கள் வரை எவரும் – இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – என்று வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. ‘இலங்கையில் நடந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்கிற புளுகுமூட்டையைப் பிரித்து அவ்வப்போது தமிழகத்தில் கடைபரப்புகிறார்கள். அவர்களிடம் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி ஒன்றை ‘தமிழக அரசியல்’ வாயிலாகக் கேட்கவேண்டியிருக்கிறது.

பெருமதிப்புக்குரிய காங்கிரஸ் நண்பர்களே! நான் மறுக்கிற கொள்கையாக இருந்தாலும்இ அந்தக் கொள்கையை உதட்டளவில் பேசாமல் உள்ளத்திலிருந்து பேசும் எந்தத் தரப்பையும் மதிப்பவன் நான். அந்த அடிப்படையில் உங்களைக் கேட்கிறேன். ‘இலங்கைதான் இந்தியாவுக்கு நட்பு நாடு. ராஜபட்சே தான் இந்தியாவின் உயிர் நண்பன். இந்தியாவின் இறையாண்மையைப் போலவே இலங்கையின் இறையாண்மையும் முக்கியமானது என்பது உங்களது உறுதியான கொள்கைதானே! அப்படிப்பட்ட இலங்கையின் விளையாட்டு அணியைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கமுடியாது – என்று மறுக்கிறார் முதல்வர். இது உங்கள் நண்பன் ராஜபட்சேவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம் இலங்கையின் இறையாண்மைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் இறையாண்மைக்கும் சேர்த்து விடுக்கப்படும் சவால்! நான் சொல்வது சரிதானா!

இந்த விஷயத்தில் உங்கள் நிலை என்ன? இலங்கை தான் நண்பன் என்கிற உங்களது கொள்கை உளப்பூர்வமானது என்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? தமிழக அரசு மறுத்தாலும்இ அந்தப் போட்டி திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் நடக்கும் என்று அறிவிக்கவேண்டாமா?

தகுதி இருக்கிறதோ இல்லையோ மத்தியில் நீங்கள் தானே ஆள்கிறீர்கள்! தமிழகத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான விளையாட்டுத் திடல்கள் எத்தனை இருக்கின்றன என்பதை மணிசங்கரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாதா? அந்தத் திடல்களில் திட்டமிட்டபடி ஆசியத் தடகளப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்துஇ இலங்கைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்க முடியாதா? ஒரு சர்வதேசப் போட்டிக்குத் தேவையானபடி அந்தத் திடல்களைத் தயாரிக்க சுரேஷ் கல்மாடியைக் கொண்டுவந்து களத்தில் இறக்க முடியாதா? (ஜெயிலில் இருந்தால் பெயிலில் கூட்டிட்டு வாங்கப்பா! அந்த ஆளால்தான் 24 மணி நேரத்தில் விளையாட்டுத் திடலைத் தயாரிக்க முடியும்!)

இப்படியெல்லாம் செய்து போட்டியை நடத்த முயன்றீர்களென்றால் இந்தியா – இலங்கை இரண்டின் இறையாண்மையையும் காப்பாற்றவேண்டும் என்கிற உங்கள் கொள்கை உறுதியானது என்று பொருள். இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் நீங்கள் என்பது இப்படியாவது நிரூபிக்கப்படும். இல்லாவிட்டால்இ நண்பன் இலங்கையின் மானத்தைக் கப்பலேற்றி ஹம்பன்தோடாவுக்கு அனுப்புகிறீர்கள் என்று அர்த்தம். கொஞ்சம் ஏமாந்தால் பான் புரோக்கர் பான் கீ மூனின் கடையில் போய் ராஜபட்சேவை அடமானம் வைத்துவிட்டு சாம் அங்கிளோடு கம்பிநீட்டி விடுவீர்கள் என்ற அவதூறு எழும்!

இறையாண்மை என்பது இயல்பாகவே உங்கள் இச்சையா அல்லது தமிழினத்துக்குச் செய்கிற பச்சைத் துரோகத்தை மறைக்க நீங்கள் பயன்படுத்துகிற வார்த்தையா என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன் நான்! 420 கோஷ்டிகளில் ஒரு கோஷ்டி கூடவா இதற்குப் பதிலளிக்காமல் போய்விடுவீர்கள்?

எங்களில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் – ‘இந்தியாவின் ஒருமைப்பாடு முக்கியமா ஈழத்து உறவுகளின் உயிர் முக்கியமா’ என்று! திட்டவட்டமான பதில் கிடைக்கும் எங்களிடமிருந்து. என்ன பதில் அது?  24.02.2013 தமிழக அரசியல் – இதழ் கட்டுரை
Leave a Reply

Your email address will not be published.