ஜனாதிபதி உரையின் போது பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.–தி.மு.க. எம்.பி.க்கள் கோஷம்

புதுடெல்லி

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தியபோது அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினார்கள். ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.

இலங்கை பிரச்சினை

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் நடந்த போரின் போது அப்பாவி தமிழர்களும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான அமெரிக்க தீர்மானம் ஐ.நா. சபை முன் அடுத்த வாரம் வருகிறது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் இலங்கை ராணுவத்தால் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் சேனல்–4 மூலம் சமீபத்தில் வெளியானது. இந்த பிரச்சினை இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

அ.தி.மு.க., தி.மு.க. கோஷம்

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது பேச்சை தொடங்கியதும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்து நின்று இலங்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். அவர்களில் சிலர் இதனை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம்

மத்திய மந்திரிகள் நாராயணசாமி மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் அந்த எம்.பி.க்களை சமாதானம் செய்ய முயன்றனர். சிறிது நேரம் கழித்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் தெலுங்கானா ஆதரவு கோஷங்களை எழுப்பினார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கக்கோரி கோஷம் எழுப்பினார். இதுபோன்று சில எம்.பி.க்கள் ஜனாதிபதியின் உரையின்போது கோஷங்கள் எழுப்பினாலும் அவர் தொடர்ந்து தனது உரையை வாசித்து முடித்தார்.

பா.ஜ.க. கருத்து

ஜனாதிபதி உரையின்போது ஆளும் காங்கிரஸ் மற்றும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சில கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் கோஷம் எழுப்பி இடையூறு செய்தது குறித்து பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரே ஜனாதிபதி உரையின் போது இடையூறு ஏற்படுத்துவது வருந்தத்தக்கது. ஆனால் இது ‘இந்த ஆட்சியில் அனைவருமே நன்றாக இல்லை’ என்ற உண்மையை பிரதிபலிக்கிறது. இந்த ஆட்சியில் அனைவருமே பாதிக்கப்படுவதை நாங்கள் ஆரம்பம் முதலே கூறிவருகிறோம். அரசின் செயலற்ற கொள்கைகளால் கூட்டணி கட்சிகளிடையே கூட ஒருமித்த கருத்து இல்லை.

விளக்கம் அளிக்க வேண்டும்

தி.மு.க. எழுப்பிய இலங்கை பிரச்சினைக்கும், காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பிய தெலுங்கானா பிரச்சினைக்கும் இந்த அரசு பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் ஒரு முடிவு காண வேண்டும். ஆளும் கட்சி எம்.பி.க்கள் ஒரு தவறான தகவலை நாட்டுக்கு அளித்திருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.