இலங்கை ராணுவத்தால் பாலச்சந்திரன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது உலகெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் இன்று சென்னை மெரீனா கடற்கரையில் பாலச் சந்திரன் படுகொலை முன்னிட்டு மாபெரும் நினைவேந்தல் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான மாணவர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர். மெழுகுத் திரி ஏந்தி நடந்த இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திரு பழ நெடுமாறன் அய்யா , திரு நல்லகண்ணு அய்யா , திரு பண்ருட்டி வேல்முருகன் , இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்,திரு.ஜோசப் கென்னடி(ஒருங்கிணைப்பாளர்-போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்),”மகிழ்ச்சி “மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் .
மேலும் மே 17 இயக்க தோழர்.உமர்,உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்க தோழர் .இராஜா ஸ்டாலின்,தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர்.அருண் சௌரி ,தமிழர் எழுச்சி இயக்க தோழர்.வேலுமணி,தமிழக பெண்கள் செயற்களம் தோழர்.இசைமொழி,உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க தோழர்.இராஜ்குமார் பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு இயக்க தோழர்கள் பங்குகொண்டு மாணவர்களின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்தனர்.
இம்மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான தோழர்.தினேஷ்,தோழர்.ஜோதி,தோழர்.கார்த்தி ,தோழர்.இராஜா ஆகியோர் அனைத்து கல்லூரிகளை சார்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்தனர், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமான பேர் இக்கூட்டத்தில் கலந்து பாலச் சந்திரனை படுகொலை செய்ததற்கு கடுமையா கண்டன முழக்கங்களை எழுப்பினர். இலங்கையில் நடந்த இனபடுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனவும், ஈழத் தமிழரிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் , தமிழக சட்டமன்றம் முன்மொழிந்த இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை இந்திய அரசு நடைமுறை படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகமெங்கும் மாணவர்கள் பெரும்திரளாக இலங்கைக்கு எதிராக போராட்டம் செய்ய உள்ளனர் என்று இக்கூட்டத்தில் மாணவர்கள் தெரிவித்தனர்.