இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சென்னை பல்லாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஒரு நாள் தொடர் முழக்க பட்டினி போராட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பேசியது:
“தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள டெசோ அமைப்பை நெடுமாறனில் இருந்து சீமான் வரை எதிர்ப்பது என்பது, அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கும் மறைமுக ஆதரவாகும் என்று தி.மு.க. ஆதரவு அறிவு ஜீவிகள் பேசி வருகின்றனர்.
நாங்கள் டெசோவை எதிர்ப்பது ஜெயலலிதாவை மறைமுகமாக ஆதரிப்பதாகும் என்றால், ஈழ விடுதலையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றாத டெசோ, தமிழனப் படுகொலையாளன் ராஜபக்சவுக்கு நேரடி ஆதரவு அளிக்கும் அமைப்பாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை எங்களின் அரசியல் நிலைப்பாடு என்பது, ஈழத் தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டுமெனில், உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்களிடம் ஒரு நேரடியான வாக்கெடுப்பை ஐ.நா. அவை நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.
ஆனால், தி.மு.க. அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காது என்று ராஜபக்ச கூறுகிறார். இந்தியா தனக்கு எதிராக வாக்களிக்காது என்று எந்த தைரியத்தில் ராஜபக்ச கூறுகிறார்? இலங்கையில் போர்க் குற்றம் நடந்துள்ளது என்று இந்தியா கூறினால், நான் இந்தியாவின் போரைத் தான் நடத்தினேன் என்றும், தமிழருக்கு எதிரான அந்த போருக்கு ஆயுதம், ஆலோசனை, ராடார், நிதி என்று எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்து, தமிழினத்தை வேகமாக அழித்தொழிக்கச் சொன்னது இந்தியாதான் என்றும் ராஜபக்ச கூறுவார். இலங்கையில் நடந்த போருக்கு மூல காரணம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் பிள்ளைகளான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிதான் என்று ராஜபக்ச கூறுவார்.
அதுதான் உண்மை. எனது தாய், தந்தை, தங்களைகள், தம்பிகள் என்று வேறுபாடு இன்றி, அனைவரையும் கொன்றொழிக்க இலங்கை அரசுக்கும், இராணுவத்திற்கும் ஆயுதம், பயிற்சி, ஆலோசனை கொடுத்தது மட்டுமின்றி, நிதியின்றி தவித்த ராஜபக்ச அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி உதவியும் செய்தது இந்திய மத்திய காங்கிரஸ் அரசு. தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போர் நடந்ததற்கு மூல காரணம் தமிழினத்தின் மீது சோனியா காந்தி கொண்டுள்ள வெறுப்புணர்வே. அது தமிழினத்தின் அழிப்பை நடத்தி முடிக்க ராஜபக்சவை தூண்டியது. அதனால்தான் தான் இந்தியாவின் போரை நடத்தியதாக ராஜபக்ச வெளிப்படையாக கூறினார்.
டெல்லியிலே ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு, பிறகு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தபோது, இந்த நாடும், இந்த அரசும் அதற்காக எப்படியெல்லாம் துடித்தன. கற்பழித்தவனை தூக்கி போட வேண்டும் என்கிற அளவிற்கு சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கையில் எத்தனை ஆயிரம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், அதற்குக் காரணமான இலங்கை அரசு அதிபரை கண்டிப்பதற்கு பதில் கெளரவிக்கிறீர்களே? இதுதான் ஜனநாயகத்தின், மனிதாபிமானத்தின் அடையாளமா? இலங்கையில் தமிழ்ப் பெண்கள் இன்றளவும் கற்பழிக்கப்படுகிறார்கள், அது அரச பயங்கரவாதம் இல்லைய? நாங்கள் கேட்பது எம் இனத்தின் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி. அதற்காகத்தான் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று ஐ.நா.வை கேட்கிறோம். எங்களின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனுக்காக மட்டும் நியாயம் கேட்கவில்லை, அவரைப் போல் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் படுகொலைக்கு நியாயம் கேட்கிறோம்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது மனித உரிமை மீறல் என்று திரும்பத் திரும்ப கூறுகிறார் கருணாநிதி. ஒரு இனமே அழித்தொழிக்கப்பட்டது திட்டமிட்ட இன அழித்தலா அல்லது மனித உரிமை மீறலா? தமிழர்கள் அறிவார்ந்தவர்களாகவும், சுய மரியாதை உள்ளவர்களாகவும் இருந்திருந்தால், இந்தக் கருணாநிதி ஒரு வட்டச் செயலாளராகக் கூட ஆகியிருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற தனது மகனை ஐ.நா.அலுவலகத்திற்கு அனுப்பி மனு கொடுக்க வைத்தாரே? இப்போது ஏன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்? தனது மகனை மீண்டும் ஐ.நா.விற்கு அனுப்பி பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை கொண்டு வரக்கோரி வற்புறுத்தலாமே? ஏன் செய்யவில்லை? எல்லாம் தமிழர்களை ஏமாற்றி செய்யும் திட்டமிட்ட நாடகமாகும். தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அவர் ஏன் இப்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்கு சென்று, மனித உரிமை ஆணையரைப் பார்த்து பன்னாட்டு விசாரணைக்கு வற்புறுத்தக் கூடாது? இவர்களெல்லாம் தமிழர்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அல்லர்.
தன் நாட்டு மீனவர்களை ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி துரத்தும், சுட்டுக் கொல்லும் ஒரு அண்டை நாட்டை எந்த நாடாவது நட்பு நாடு என்று கூறுமா? நமது மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கையை நட்பு நாடு என்றுதான் இன்றுவரை இந்திய மத்திய அரசு கூறி வருகிறது. எதற்காக இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிக்க வேண்டும்? அந்த நாடு எந்த அண்டை நாட்டுடன் போர் செய்யப் போகிறது? தனது நாட்டு மக்களான தமிழர்களுக்கு எதிராகத்தானே அது போர் நடத்தியது? அபடியானால், தமிழர்களை அழிக்கும் போருக்கு இந்தியா பயிற்சியும் ஆதரவும் அளிக்குமானால், இந்தியாவிற்கு தமிழர்கள் பங்காளியா, பகையாளியா? தமிழ்நாட்டு மக்கள் இந்தியர்களா, இல்லையா? மத்திய அரசு விளக்க வேண்டும்.
தமிழீழ விடுதலை யாருக்கு? சுட்டுக்கொல்லப்பட்ட பாலசந்திரன் போன்ற பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்காக, அல்லது ஈழத் தமிழர்களுக்காக அல்லது பல பத்தாயிரக்கணக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்தனரே அந்த மாவீரர்களுக்கா? இவர்கள் யாருக்கும் இல்லை, இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ் மக்களுக்கான தேசம் தமிழீழம். தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழினத்திற்கான விடுதலையே. அதனை பெறாமல் தமிழினம் ஓயாது, ஒருபோதும் ஓயாது. அந்த விடுதலையை வென்றெடுக்க பாலசந்திரனின் இரத்தின் மீது உறுதியேற்போம்”