கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்த மணி அவர்கள், இளம் வயதில் இருந்தே நாட்டு நலனுக்காகவும் அநீதியை எதிர்த்தும் போராளியாகவே வாழ்ந்து உள்ளார்.
வளைகுடா நாட்டில் கப்பல் துறையில் பணியாற்றி உள்ளார். மனிதநேயம் மிக்கவராகவே வாழ்ந்து, 26 முறை குருதிக்கொடை அளித்து உள்ளார். சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அதிகார வர்க்கத்தை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வந்தார்.
ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுந்துயர் குறித்து மனம் உடைந்தவராக பல கட்டங்களில் தன் வேதனையைப் புலப்படுத்தி உள்ளார். இளந்தளிர் பாலச்சந்திரன் படுகொலை, அவரை முற்றிலும் நிலைகுலையச் செய்ததாக அவரது நண்பர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். அதனால்தான், நேற்றைய தினம் மார்ச் 4ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து தீக்குளித்தார்.
“தமிழ் இனக்கொலை செய்த இராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; தமிழ் ஈழம் தனி நாடாக வேண்டும்” என்று அறிவித்து தன் உயிரை அர்ப்பணித்து உள்ளார். அவருக்கு எனது வீரவணக்கம்.
பேரிடி தலையில் விழுந்த நிலையில், கதறித் துடிக்கும் அவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.
தமிழ் ஈழ விடியலுக்காக வாழ்ந்து போராட வேண்டிய இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச்செயலாளர்
05.03.2013 மறுமலர்ச்சி தி.மு.க.