கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது, சாப்பாட்டு விடயத்தில்தான். இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே? தாயின் வயிற்றில் கரு உருவாகி 15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும்.
அப்போது ஒரு கர்ப்பிணிக்கு கால்சியம், இரும்பு சத்துகள் அவசியம் தேவைப்படும்.
ஆகவே உங்களின் அன்றாட உணவில் தினமும் ஒருவகை கீரை, பருப்பு, பால், தயிர் ஆகியவை தவறாமல் இடம்பெறட்டும். தினம் ஒரு அப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். பாலில் கால்சியம், புரதம் உள்ளிட்ட தாதுஉப்புகள் அதிகம்.
ஆகவே அன்றாடம் ஒரு லிட்டர் வரையில் கொஞ்சம்-கொஞ்சமாகவேனும் பால் அருந்தி வரவேண்டும். தயிர், பால்பொருட்கள், கொண்டைகடலை, பட்டாணி சாப்பிடலாம். இத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் மருத்துவர் ஆலோசனைபேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தபோதிலும் மாத்திரையைவிட பால் நல்லது.
பொதுவாக கர்ப்பமான 4ம் மாதத்தில் அனைவருக்கும் வரும் பிரச்னை-மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. நிறைய கீரை- பழங்கள் சாப்பிடுவதுதான், இந்த பிரச்னைக்கு அருமருந்து. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
பழங்களில் பப்பாளி, அன்னாசியை தவிர்ப்பது நல்லது. ‘இத்தகைய பழங்களால் கரு கலைந்துவிடும்’ என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை.
‘கர்ப்பிணிகள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறுதான் சாப்பிட வேண்டும்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது.
இது முற்றிலும் தவறு. அப்படியாக கர்ப்பிணிகள் அரை வயிற்றுக்கு சாப்பிட்டால் பிரசவத்தின்போது கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ நிகழும். இதுதவிர, பிரசவத்துக்கு முன் வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, தாய்சேய் இருவரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கும் வாய்ப்பு போன்றவை ஏற்படலாம்.
அதேவேளையில் ‘இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டுமே?’ என்று ஊட்டமாக சாப்பிட்டாலும், சங்கடம்தான். அதிலும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடைவரையில் கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்க கூடாது. கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்தஅழுத்தம் அதிகரிக்கும்.
எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி, பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிவிடும். இதுதவிர பிரசவத்திலும் சிக்கல் வரலாம். ஆகவே கொழுப்பு சத்து குறைந்த-நல்ல உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுவது அவசியம். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
மேலும் அடர் பச்சை-மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அதிகம் உள்ளன. கர்ப்பிணிகள் சாப்பாட்டில் மட்டுமல்ல, குடிநீர் விடயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி-வடிகட்டி குடியுங்கள்.
இல்லையெனில், அத்தகைய அசுத்த நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம். சில பெண்களுக்கு எட்டாம்-ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து கை-கால்கள் வீங்கிவிடும்.
இப்படிப்பட்டவர்கள் உணவில் உப்பை குறைத்து கொள்வது அவசியம். இதுதவிர பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால், உடம்பில் தேங்கி நிற்கும் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.