Search

நீதியான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி எப்போதுமே நீதி கிடைக்க வாய்ப்பில்லை!

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தீர்மானம் கொண்டு வரப்போவதாக பரபரப்போடு பேசப்பட்டு வந்த நிலையில், அது பாரதூரமாக இருக்காது என்று இலங்கை அரசே சொல்லும் அளவுக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்கத் தீர்மானம் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 14 ஆம் திகதிக்கு அது தள்ளிப் போயுள்ளது. 22ஆம் திகதி அதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.

தீர்மானிக்கப்பட்டுள்ள அந்த நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை பேரவை கட்டடத்தை சுற்றியுள்ள ஆடம்பர விடுதிகளில் இலங்கை அரசு பல கோடிகளை கொட்டி இந்திய அரசின் துணையோடு, முக்கியமாக சுப்பிரமணியம் சுவாமியின் அனுசரணையோடு அனைத்துலக பிரதினிதிகளை வளைத்துப்போடும் இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் அமர்வின்போது முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம், தமிழ் அமைச்சர் டக்ளஸ் போன்ற சிறுபான்மை இன அமைச்சர்கள் உட்பட பல உயர்மட்ட மந்திரிகள், அரச படை அதிகாரிகள், சட்ட அறிஞர்கள் என்று ஒரு பட்டாளமே ஜெனீவா சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இம்முறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் பீரிசை இணைத்துக் கொண்டு சிறு பரிவாரத்துடன் மட்டுமே சென்றிருந்தார்.

அவர் தனது ஆரம்ப உரையில் இலங்கை அரசின் வயித்தெரிச்சலை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்மேல் கொட்ட முற்பட்டு, ஏனைய நாட்டு பிரமுகர்களிடம் மூக்குடைபட்ட நிலையில், துணைக்கு வந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தனது இயலாமையை தலைவரிடம் சொல்லி பரிகாரம் தேடுவதற்காக தாய்நாடு திரும்பிவிட்டார்.

கடந்த முறையைப்போல் விமல் வீரவான்சவையும் ஜாதிக ஹெல உறுமையைiயும் முன்னிலைப்படுத்தி சிங்கள மக்களை வீதிக்கு இழுத்து மேற்குலக நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு இம்முறை மகிந்த அவர்கள் தயங்குவதாகத் தெரிகிறது.

இந்தியாவின் எச்சரிக்கை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அமெரிக்காவை பகைத்துக் கொள்ளாமல் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று இந்தியா சொன்னதன் அர்த்தத்தில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும்.

மேற்குலக நாடுகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் சங்கடங்களை எதிர்கொண்ட இலங்கை அரசு, மகிந்த சிந்தனையின் போர்வையில் தெற்கிலிருந்து வடக்குக்கு சமாதானப் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். சர்வதேசத்தை எமாற்றும் பாணியிலான இந்த முயற்சி நாமல் ராஜபக்ச மற்றும் புத்த பிக்குகளின் தலைமையில் கதிர்காமத்திலிருந்து வடக்கு நோக்கியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதையும் அடாவடித்தனமாகவே செய்து பழக்கப்பட்ட இலங்கை அரசு, பிரச்சார நோக்கில் தெற்கிலிருந்து சமாதானப் பேரணியை ஆரம்பித்திருக்கும் அதேசமயம், காணமல்போன மற்றும் கைதான தமது உறவுகளை விடுதலை செய்யக் கோரி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புறப்பட்ட மக்களை வவுனியாவில் தடுத்துவைத்து தங்களது இனவிரோத நிலைப்பாட்டை வெளியுலகத்துக்கு படம்போட்டு காட்டியுள்ளது.

கொழும்பில் மட்டுமே நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த காணாமல்போன உறவுகளின் ஊர்வலத்தில், வடக்கு மக்கள் கலந்துகொள்வதை தடை செய்ய முற்பட்டு, அதையே கொழும்பிலும் வவுனியாவிலுமாக இரு இடங்களில் இடம்பெற செய்ததன் மூலம் சர்வதேசத்தையே ஒருகணம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இலங்கை அரசு.

வடபகுதி மக்களின் இறுதிக்கட்ட நாடித்துடிப்பை அறிவதற்காக சென்றிருந்த அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஜேக்கப் குழுவினரின் கவனத்தில்கூட வவுனியாவில் தடுக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் பதிவாகும் ஒரு நிலையை இலங்கை அரசு தானாகவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தேடிச்சென்று தாமாகவே பொறிக்குள் விழும் நிலையை இலங்கை அரசு அண்மைக்காலமாகவே ஏற்படுத்தி வருகிறது. அதுவும் ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமக்கு எதிரான நிலைமை கழுத்தளவுக்கு வந்துள்ள நிலையிலும், இலங்கை அரசு தமது அடாவடித்தனத்தை குறைத்துக் கொள்ளாமல் தாமாகவே வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளும்படியாக நடந்து கொள்கிறார்கள்.

சிறைச்சாலை கைதிகள் கொலை, பிரதம நீதியரசர் பதவி நீக்கம், பத்திரிகையாளர்களை தாக்குவது, யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது, ஜனநாயக முறையிலான போராட்டங்களை படையினரைக் கொண்டு குழப்ப முற்படுவது என்று அடுத்தடுத்து அடாவடித்தனங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறது இலங்கை அரசு.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் தமிழருக்கு நீதியான அரசியல் தீர்வை வளங்கக்கூடியதாகவும் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியதாகவும் இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்ற போதும், அமெரிகாவின் தீர்மானம் அந்தளவுக்கு வலுவானதாக இருக்கப்போவதில்லை என்று வெளிவரும் செய்திகள் கவலை அளிப்பதாகவே இருக்கிறது.

இலங்கையை ஒரேயடியாக கவிழ்க்கும் எண்ணம் ஒருபோதும் அமெரிக்காவுக்கு இருக்கப் போவதில்லை என்பது தெரிந்த விடயமே. ஆனாலும் தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை வைத்திருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், இலங்கை மேல் ஒருதலைக் காதல் கொண்டிருக்கும் இந்தியாவை மீறி அதிக அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்பதும் அமெரிகாவுக்குப் புரியும்.

பிரேரணைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்ட நிலையில் அதை சமர்ப்பிப்பதில் அமெரிக்கா காட்டும் தயக்கத்துக்கு காரணம் இந்தியாதான் என்பதன் வெளிப்பாடு இந்திய பாராளுமன்றத்திலேயே வெளிப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் கொடுத்திருக்கும் பதில்கள்கூட மீண்டும் மீண்டும் தமிழர் முதுகில் குத்துவதாகவே அமைந்திருக்கிறது.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் அவர்களது சுயநலம் சார்ந்ததாக இருந்தாலும், அதில் அதிகபட்சம் தமிழ் மக்களின் துயர் துடைக்கும்படியான அம்சங்கள் இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஓரளவாவது அமெரிகாவின் மேல் நம்பிக்கை வைக்கும்படியாக இருக்கும்.

இம்முறை அதுவும் இல்லையேல், தமிழ் இனத்துக்கான நீதி இனிமேல் எவரிடமிருந்தும் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கருதும் நிலைதான் ஏற்படும்.

க.ரவீந்திரநாதன் (செந்தாமரை)

kana-ravi@hotmail.com
Leave a Reply

Your email address will not be published.