எகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின்போது கலவரம் ஏற்பட்டது.
போர்ட் செட் நகரில் நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியை, உள்ளூரைச் சேர்ந்த அல் மஸ்ரி அணி வீழ்த்தியது.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது இரு தரப்பு ரசிகர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
எகிப்து கால்பந்து வரலாற்றில் நடந்த மிக மோசமான இந்த வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் 21 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக போர்ட் செட் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலிஸ் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். பின்னர் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 21 பேரின் மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரித்த எகிப்து நீதிமன்றம், மரண தண்டனையை இன்று உறுதி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நகரின் முன்னாள் பாதுகாப்புத்துறை தலைவர் எஸ்ஸாம் சன்மார்க், காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்ட 10 உயர் பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இதுதவிர 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 பேருக்கு 5 ஆண்டு சிறையும், ஒருவருக்கு 12 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பையடுத்து மீண்டும் கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.