நைஜீரியா நாட்டின் வட மாநிலங்களில் ஒன்றான பவுச்சி பகுதியில் கடந்த மாதம் 16ம் திகதி 7 வெளிநாட்டினரை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இங்கிலாந்து, லெபனான், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 7 பேரும் ஜமா அரே என்ற இடத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் வேலை செய்து வந்தனர். வழக்கமாக கடத்தப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டும் தீவிரவாதிகள், இந்த முறை யாரையும் தொடர்பு கொண்டு பிணைத் தொகை எதுவும் கேட்கவில்லை.
இந்நிலையில், கடத்தப்பட்ட 7 பேரையும் தீவிரவாதிகள் கொன்று விட்டதாக இத்தாலி அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த படுகொலை, காட்டு மிராண்டித்தனமானது, குருட்டுத்தனமான வன்முறை செயல் என இத்தாலி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்களை மீட்க நைஜீரியா – இங்கிலாந்து கூட்டு ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில்தான் 7 பேரும் இறந்தனர் என்று கூறும் இவர்களை கடத்திச் சென்ற அன்சாரு இயக்கத்தின் கருத்துக்கும் இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது.