ஈரான் நாட்டிலிருந்து 7.5 பில்லியன் டொலர் மதிப்பிலான எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியும், ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத்தும் இன்று தொடங்கிவைத்தனர்.
இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளார் விக்டோரியா நூலாந்து கூறியதாவது:
ஈரான்- பாகிஸ்தான் எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்து உள்ளோம். இது குறித்து எமது கவலைகளை பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். பாகிஸ்தானுக்கு தேவைப்படும் மாற்று ஆற்றல் திட்டங்கள் அளிப்பது குறித்து, பாகிஸ்தானுக்கு உறுதியளித்துள்ளோம்.
இதற்கு முன்பு 10, 15 முறை இதுபோன்று திட்டங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். மீறி இந்த ஒப்பந்தம் இந்த நேரத்தில் நிறைவேற்றப்படுமானால், பாகிஸ்தான் தவறான வழிகளில் செல்ல அறிவுறுத்தப்படும். எனவே பாகிஸ்தான் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான்-பாகிஸ்தான் இடையேயான இந்த திட்டத்தை தடுப்பதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாது என்று ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் கூறியுள்ளார்.