ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம் புரிந்துள்ளதுடன் விடுதியில் நின்றிருந்த தென்னிலங்கை பயணிகளின் வாகனங்கள் சிலவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 11மணியளவில் இடம்பெற்றுள்ளது. நல்லூர் செட்டித்தெருவிலுள்ள குறித்த விடுதியில் தேசிய சமாதானப் பேரவையினரும், இன்னும் சில தென்னிலங்கை வர்த்தகர்களும் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை அங்கு வந்திருந்த சிலர் வாகனங்களை அடித்து நொருக்கியதுடன் விடுதியிலிருந்து யாரும் வெளியே வரமுடியாதபடி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் விடுதியிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, ஒருவர் ஓடிச் செல்வதை கண்டுள்ளனர்.
பின்னர் குறித்த நபர் வாகனமொன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் படைப்புலனாய்வாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் ஜே.வி.பி. மாற்றுக்குழுவினருக்கு யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் வழங்க கூடாதென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த விடுதியே கடந்தமுறை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தவும் இடம் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் இன்று யாழ்.நகரில் ஆர்ப்பாட்டமும். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனவே இதுவொரு அச்சுறுத்தல் நடவடிக்கை எனவே பார்க்கப்படுகின்றது.