Search

ஐயப்ப பக்தர் உடலை காவல் துறை எரியூட்டியது தவறு – சீமான் அறிக‏

ஐயப்ப பக்தரின் உடலை காவல் துறை எரியூட்டியது உரிமை பறிப்பாகும்: நாம்
தமிழர் கட்சி கண்டனம்

சபரிமலைக்குச் சென்ற திருவேற்காட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சாந்தவேலு
மீது மலையாளிகள் சிலர் வென்னீர் ஊற்றி நடத்திய தாக்குதலில் படுகாயமுற்ற
நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனையில் உயிரிழந்த அவரின் உடலை திடீரென்று கைப்பற்றிய காவல்
துறையினர், அவரது உறவினர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு, அம்பத்தூர்
சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரியூட்டியிருப்பது அடிப்படை
உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக்
கண்டிக்கிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து திருவேற்காட்டிலுள்ள அவரது
இல்லத்திற்கு சாந்தவேலுவின் உடல் கொண்டுவரப்பட்ட நேரம் முதல் உடனடியாக
உடலைத் தகனம் செய்துவிடுமாறு காவல் துறையினர் தொடர்ந்து அவரது உறவினர்களை
வற்புறுத்தி வந்துள்ளனர். எதற்காக அப்படி வற்புறுத்த வேண்டும் என்று
தெரியவில்லை. அது மட்டுமல்ல, தான் உயிரிழக்கக் காரணமான அந்த சம்பவம்
பற்றி கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது
மனைவியிடம் விவரித்துள்ள சாந்தவேலு, பம்பா அருகே ஒரு தேனீர் கடையில்
அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானதாகவும், அப்போது
கடைக்காரர் வென்னீரைக் கொண்டு வந்து தன் மீது ஊற்றியதாகவும் தெளிவாகக்
கூறியுள்ளார். தன்னோடு வந்த குருசாமி உள்ளிட்ட அனைவரும் தன்னை விட்டு
விட்டு சென்றவிட்டதாகவும், வேறு தமிழர்கள் இருவர் தன்னை கோட்டயம்
மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் கூறியுள்ளார்.

இதையெல்லாம் சுட்டிக்காட்டி அவரது மனைவி சென்னை காவல் துறையினரிடம்
புகார் அளித்த பிறகும் கூட, இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக அரசு ஒரு
அறிக்கை தராதது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு வரும்
ஐயப்ப பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரள
முதலமைச்சர் உம்மன் சாண்டி உறுதியளித்தார். அந்த உறுதி என்ன ஆனது என்று
தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அதற்கு மாறாக, தன்னிடம்
இருந்த நனைந்து போன 50 ரூபாய் நோட்டை தேனீர் கடையில் இருந்த வென்னீர்
கொதிப்பான் மீது காயவைக்க சாந்தவேலு வைத்தபோது வென்னீர் கொதிப்பான் அவர்
மீது சாய்ந்துவிட்டது என்றும், அதனால்தான் அவருக்கு தீக்காயங்கள்
ஏற்பட்டது என்று கேரள காவல்துறை கட்டிவிட்ட கதையை இங்கே பரப்புகிறார்கள்.

ரூபாய் நோட்டை காய வைக்கும்போது வென்னீர் கொதிப்பான் அவர் மீது
கவிழ்ந்துவிட்டது என்றால், சாந்தவேலுவிற்கு நெஞ்சிலும், வயிற்றிலும்தான்
தீக்காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக, முதுகிலும்,
இடுப்பிலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது எப்படி? இதிலிருந்தே
தெரியவில்லையா இது கட்டுக்கதை என்பது? அங்கே நடந்தது என்ன என்பதை
புலனாய்வு செய்து உண்மையைக் கூற வேண்டிய காவல் துறை, இந்தச் சம்பவத்தையே
மூடி மறைக்கப் பார்க்கிறதா என்பதே நாங்கள் எழுப்பும் கேள்வியாகும்.

இப்படி ஒரு சம்பவம் இங்கு தமிழ்நாட்டில் நடந்திருந்தால் கேரளத்தில் என்ன
ஆகியிருக்கும்? அங்குள்ள அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழர்கள்
மீது பாய்ந்திருக்க மாட்டார்களா? தமிழன் அடிப்பட்டால், உயிரிழந்தால்
மட்டும் அதனை ‘சாதாரண’ சம்பவம் ஆக்குவது ஏன்? சாந்தவேலு ஒரு ஏழைத்
தொழிலாளி என்பதால் அவரது மரணத்திற்குக் கூட மரியாதை இல்லையா? அவரது
உடலுக்கு ஈமச் சடங்குகள் செய்யக் கூட காவல் துறை அனுமதிக்காதது ஏன்?
இதற்கெல்லாம் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

தன்னுடைய மாநிலத்திற்கு வந்தவரை ஐயப்ப பக்தர் என்றும் பார்க்கவில்லை,
தன்னைப் போல் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்றும் பார்க்கவில்லை, அவர்
தமிழர், தாங்கள் மலையாளிகள் என்று கருதிய காரணத்தினால்தான் இப்படிப்பட்ட
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இனவெறி அல்லாமல் வேறு என்ன? என்று
கேட்கிறோம். இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இனப் படுகொலைப்
போரில் மத்திய அரசில் இருந்த, இருக்கும் மலையாள அதிகாரிகளின்
நடவடிக்கைகளும், இப்போது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில்
தமிழினத்தின் உரிமைகளுக்கு எதிரான கேரள அரசின், அரசியல்வாதிகளின்
நடவடிக்கைகளும் தமிழினத்தை எதிரியாக பாவித்து செய்யப்படுவதாகவே உள்ளது.
இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை என்பதெல்லாம் தமிழனுக்கு மட்டும்தானா
என்பதை இந்த நாட்டின் தேசியக் கட்சிகள் விளக்க வேண்டும். தனது இனத்தவன்
அடிபடும்போதெல்லாம் இதுநாள் வரை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த தமிழன்
இதற்கு மேலும் அப்படித்தான் இருப்பான் என்று எவரும் தவறாக
மதிப்பிடக்கூடாது.

சாந்தவேலுவை தாக்கிய மலையாளிகள் மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, கைது
செய்யப்பட வேண்டும். இதனை கேரள அரசும், காவல் துறையும்
செய்யவில்லையென்றால், அப்பிரச்சனையை சட்ட ரிதீயாக தமிழக அரசு உரிய
வழியில் அணுக வேண்டும். ஏழை ஐயப்ப பக்தருக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி
கிடைத்திட வேண்டும்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *