பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவது – கோத்தபாய ராஜபக்ஷ
இலங்கையின் அதிகாரங்களை பரவலாக்க வேண்டுமாயின், சர்வதேசம் மற்றும் புலம்பெயர் புலிகளுக்கு தேவையான வகையில் அல்ல எனவும் இலங்கையில் வாழும் பெருபான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமையவே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போருக்கு பின்னர் அதிகாரப்பரவலாக்கம் குறித்து சிலர் பேசுகின்றனர். இது தொடர்பாக சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆலோசனை வழங்குகின்றன. அழுத்தங்களை கொடுக்கின்றன. தமிழக அரசியல்வாதிகள் அங்கிருந்து கொண்டு சத்தமிடுகின்றனர். அவர்கள் எப்படி இலங்கையில் அதிகார பரவலாக்கம் குறித்து பேசமுடியும். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. ஜனாதிபதியும், அரசாங்கம் அதிகாரத்தை பரவலாக்கினால், அது நாட்டின் பெருபான்மையான மக்களின் விருப்பத்திற்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டில் இருப்பது ஜனநாயக ரீதியிலான ஆட்சி, இராணுவம் சூழ்ச்சியில் ஆட்சியை பிடித்திருக்கவில்லை. புரட்சி மூலம் அதிகாரம் கைப்பற்றப்படவில்லை. நாட்டில் இருந்த பயங்கரவாதம் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. தற்போது தேவையான அரசியல் சுதந்திரம் உள்ளது. வடக்கில், தெற்கில் எவருக்கும் அச்சமின்றி அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. தாம் விரும்பிய எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க முடியும். அப்படியானால் அதிகாரத்தை பரவலாக்குவது என்பது என்ன?. இது மீண்டும் நாட்டை துண்டுகளாக பிளவுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையாகும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.