விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, 11 நாடுகளிடம் இருந்து ஆயுதங்களும், உதிரிபாகங்களும் கிடைத்தது என்பதை சாட்சியங்களுடன் சர்வதேசத்திற்கு முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை இராணுவம் போர் குற்றங்களை செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க போவதாக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முள்ளிவாய்க்கலில், புலிகளின் பதுங்குழிகளில் இருந்து கிடைத்த ஆவணங்கள் மூலம் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் எம்.16 ரக துப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர நோர்வே நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரா என்ற செய்மதி கட்டமைப்பு மற்றும் புலிகளின் விமானங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் ஐரோப்பாவில் உள்ள இரண்டு நாடுகளிடம் இருந்து பெறப்பட்டதாக புலிகளின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் புலிகளின் கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தமைக்கான ஆவணங்களும் மீட்கப்பட்டன. இலங்கை இராணுவம் பெற்றுக்கொள்ள முடியாத தொடர்பாடல் கருவிகளை கூட சில நாடுகள் புலிகளுக்கு வழங்கியிருந்தன. இது தொடர்பாக புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தர் கே.பி சாட்சியாக முன்நிறுத்தப்பட உள்ளார்.