சிறிலங்காவைப் பகை நாடாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.
சுவிஸ் நாட்டிற்கு முதற் தடவையாக வருகை தந்துள்ள செந்தமிழன் சீமான், “இருப்பாய் தமிழா நெருப்பாய்” என்ற எழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுவிஸ், செலத்துண் மாநிலத்தில் நேற்று மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.
குறுகிய கால அழைப்பில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சீமான் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக எழுச்சி உரை நிகழ்த்தினார்.
இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சி கணப்பொழுதில் உருவான ஒன்றல்ல. அதன் பின்னணியில் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் உழைப்பு உள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது தமிழ் நாட்டு உறவுகளின் நெஞ்சங்களில் கொழுந்து விட்டு எரியும் தீ, தமிழீழம் என்ற இலட்சியத்தை எட்டும் வரை அணையாது ஒளிரும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கட்சியின் சட்ட ஆலோசகர் “தடா” சந்திரசேகர் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். பேர்ண் நர்த்தனாலாய நடனப் பாடசாலை மாணவியரின் நடனம், செல்வி ரம்யா சிவானந்தராஜா அவர்களின் எழுச்சிப் பாடல் ஆகிய நிகழ்வுகளும் இடம் பெற்றன.
செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரையின் முழுமையான ஒலி வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.