செய்திகள்

வட – கிழக்கில் அரசுக்கு எதிரான நிர்வாகத்தை அனுமதிக்க முடியாது – கோத்தா சூளுரை!

 ”எமது தலைமைத்துவத்தை நோக்கி ஆயுதத்தைக் குறிவைத்த ஒரு நிர்வாகத்தை நாம் அனுமதிக்க முடியுமா?  திட்டம் தீட்டி எதிராக செயல்படும் ஒரு மாகாண நிர்வாகத்தின் கருணையில் செயல்படுவதற்கு நாம் தயாராக இல்லை. வடக்கில் அல்லது கிழக்கில் பகைமை கொண்ட மாகாண நிர்வாகம் ஒன்று உருவாகுமானால் போருக்குப் பின்னர்  மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய மீள் இணக்கத்துக்கு அது பாதகமாக அமையும்.’ இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ .கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அப்படியான ஒரு நிர்வாகமானது தமிழீழ விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட மரபு ரீதியிலான இராணுவ சவாலுக்கு இணையானதாகவே இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சில மேற்கு நாடுகள் மற்றும் பிரிட்டனில் நிலை கொண்டுள்ள  உலகத் தமிழர் பேரவையால்  பிரதிநிதித்துவம் செய்யப்படும் விடுதலைப் புலிகளின் வால்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்டுத் தமிழ்நாடானது இந்திய மத்திய அரசுக்கு நிபந்தனைகளை விதித்து வருகிறது என்பது தெளிவாகப் புரிகின்றது.
தமிழ் நாட்டில்  நெருக்குதல்கள் அதிகரித்து வருவதானது இலங்கைக்கு நல்லதொரு பாடமாக அமையப் போகிறது. வெளிநாட்டவர் எமது விவகாரங்களில் தலையிடும் அனுபவங்கள்  எமக்கு முன்பும் இருந்துள்ளது.
எமது உள்ளக அரசியலில்  தேசிய நல்லிணக்கத்தின் பெயரில் வெளிநாட்டவர் தலையிடுவதை அனுமதிப்பதில்லை என்ற தீர்மானத்துடன் நாம் இருக்கின்றோம்.
தேசிய நலன்களைப் பாதுகாக்க, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்டுள்ள அரசினால் பொருத்தமான நடவடிக்கை எடுக்க முடியும்.
இலங்கையில் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்தி தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள்  இங்கு 13 ஆவது அரசமைப்புத்  திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகளைத்  தடுத்து நிறுத்துவதாக அமைந்துவிடும்.” என்றார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *