Search

இலங்கையில் மையம் கொண்டுள்ள நிழல் யுத்தம்

  விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையை மையப்படுத்திய நிழல் யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது. இலங்கையின் புவிசார் கேந்திர அமைவிடம் தான் இந்த நிழல் யுத்தத்தின் அடிப்’படைக் காரணம்.

 இந்த நிழல் யுத்தத்தில் பங்கெடுக்கும் தரப்புகள் ஒன்றிரண்டு நாடுகள் அல்ல.

அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான், ஈரான், பாகிஸ்தான் என்று உலகில் முக்கியமான சக்திகளின் கவனம் இப்போது இலங்கையின் மீது திரும்பியுள்ளது.

சர்வதேச கடல்வழிப் பாதையை அண்டியுள்ள இலங்கையின் அமைவிடம் பல்வேறு நாடுகளும் இலங்கையின் மீது குறிவைத்துச் செயற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

பல்வேறு நாடுகளும் இலங்கையைத் தமது பாதுகாப்பு நலனுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள முற்படுவதும், இலங்கை தனக்குள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்க சில நாடுகளுக்கு அதிக இடைவெளியை கொடுப்பதும் இந்தப் பிராந்தியத்தை நிழல் யுத்தத்துக்கான களமாக்கி விட்டுள்ளது.

இந்த நிழல் யுத்தத்தில் சீனா ஏற்கனவே அதிக செல்வாக்கை கொண்டுள்ளது தெரிந்ததே. போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு திடீரென அதிகரித்தது.

அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைப்பதால் வர்த்தக நலன்கள் கிடையாது என்று, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா தட்டிக்கழிக்க அதனை சீனா கவ்விப் பிடித்துக் கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தது.

அதன் தொடர்ச்சியாக மத்தள விமான நிலையம், அனல் மின் நிலையம், துறைமுகங்கள், அரங்கங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் என்று சீனாவின் கையில் ஏகப்பட்ட திட்டங்கள் போயின.

இதன்மூலம் இப்போது இலங்கைக்கு உதவும் (கடன் மற்றும் கொடை) நாடுகளின் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது சீனா. அம்பாந்தோட்டையில் அமைத்துள்ள துறைமுகத்தை இந்தியா வெகுவாக அச்சத்துடன் பார்க்கிறது.

இந்தத் துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்துக்கான எரிபொருள் விநியோகத்தை சீனாவே மேற்கொள்ளவுள்ளது. இது, தனது பாதுகாப்புக்கு எதிராக, அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவினால் பயன்படுத்தப்படக் கூடும் என்ற இந்தியாவின் அச்சத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வரிகள், தீர்வைகள் இல்லாமல் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் திட்டத்தை சீனாவின் ஹன்குய் ஒப்பந்த மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு அளித்துள்ளது இலங்கை.

அதுவும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த சூழலில் தான் இது இடம்பெற்றுள்ளது.

இதனை இந்தியா ஒருபோதும் விரும்பாது. திருகோணமலையில் பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட 102 எண்ணெய்க குதங்களையும் 600 ஏக்கர் காணிகளையும் 2002ல் இந்தியா பெற்றுக் கொண்டது.

இவற்றை இந்தியாவின் அரச நிறுவனமான இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனம் நிர்வகிக்கிறது. இதற்குப் போட்டியாகவே அம்பாந்தோட்டைத் துறைமுகம் விமான நிலையத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கால் வைத்துள்ளது சீனா.

அதுமட்டுமன்றி ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் திருகோணமலையின் எண்ணெய்க குதங்களின் ஒரு பகுதி இந்தியாவிடமிருந்து மீளப் பெறப்படவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார்.

அதனை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும், அநுர பிரியதர்ஷன யாப்பாவும் நிராகரித்துள்ளனர். எனினும் திருகோணமலை எண்ணெயக் குதங்கள் இந்தியாவிடம் இருப்பதை, இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என்பது மட்டும் உண்மை.

இவை கைமாற்றப்பட்ட உடன்பாட்டை விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த உடன்பாட்டுக்கு ஒப்பானது என்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இலங்கையில் எண்ணெய் விநியோகத்தில் இந்தியா இறங்கியது லாபத்தை நோக்கமாகக் கொண்டு அல்ல என்றும் அடித்துக் கூறியுள்ளார்.

இலங்கையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே எண்ணெய்க் குதங்களைக் கைப்பற்றியதாக அவர் கூறியுள்ளது, இந்த அரசாங்கத்தின் மனோநிலையை படம்பிடித்துக் காட்டுகிறது.

இப்போது அதேவழியில் சீனாவுக்கும் எண்ணெய் விநியோகத்துக்கான களத்தை திறந்து விட்டுள்ளது இலங்கை.

இந்தநிலையில் இலங்கை மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவைக் கண்காணிக்கவும், அதன் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் இந்தியா விசாகப்பட்டினத்தில் உயர் திறன் கொண்ட நீர்மூழ்கி கடற்படைத் தளமொன்றை அமைக்கவுள்ளது.

சீனா உள்ளிட்ட எதிரி நாடுகளின் செய்மதிகளின் கண்ணுக்குப் புலப்படாத வகையிலும், வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலும் நீர்மூழ்கிகளுக்கு பதுங்கு குழி வசதிகளுடன் இந்தத் தளம் அமைக்கப்படவுள்ளது. விசாகப்பட்டினத்திலுள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகத்தில் இருந்து 50 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தளம் வர்ஷா திட்டம் என்ற பெயரில் நிறைவேற்றப்படவுள்ளது.

சீனாவின் ஹைனான் தீவின் தென்புறத்தில் யலோங்கில் அமைந்துள்ள தரைக்குக் கீழான அணுசக்தி நீர்மூழ்கித் தளத்துக்குப் பதிலடியாகவே இந்தியா இதனை அமைக்கவுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இங்கு தான் சீனாவின் புதிய சாங் வகை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் உள்ளன.

ஆனால் இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீட்டை குறைப்பதற்கே விசாகப் பட்டினத்தில் புதிய தளம் அமைக்கப்படுகிறது என்’று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் செய்மதி மற்றும் விண்வெளித்துறையில் ஏற்பட்டு வரும் நெருக்கம் தான்.

செய்மதிகளை ஏவ இலங்கைக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு அவற்றைக் கொண்டு தமது நீர்மூழ்கிகளை சீனா உளவு பார்க்கலாம் என்று இந்தியா அச்சம் கொள்கிறது.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் பலமே இலங்கை தான் என்று மாறிப்போயுள்ளது.

இந்தநிலையில் விசாகப்பட்டினத்தில் இந்தியா அமைக்கவுள்’ள பாரிய தளமும், அம்பாந்தோட்டையில் எரிபொருள் விநியோகம் சீனாவின் கைக்குச் சென்றுள்ளதும், இந்த நிழல் யுத்தத்தில் மையத்தை இலங்கையை நோக்கி இழுத்து விட்டுள்ளன.

இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் இலங்கையை வைத்து இந்தியாவுக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறது.

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குவாசிம் குரேஷி நியமிக்கப்பட்டள்ளதை இந்தியா விருப்புடன் பார்க்கவில்லை.

இது ஒரு இராணுவ நலன்சார் நகர்வு என்றும், தனக்கு எதிரான நடவடிக்கை என்றும் தான் இந்தியா கருதுகிறது.

கடந்த மாதம் இவர் கொ|ழும்பிலுள்ள தூதரகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இம்மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடிப்பதில் பாகிஸ்தானே அதிக கரிசனை காட்டியது.

கடந்தமுறை சீனா நேரடியாக களமிறங்கி ஆதரவு திரட்டியது. இம்முறை சீனா அவ்வாறு ஈடுபடவில்லை.

இம்முறை சீனாவின் இடத்தை பிடித்துக் கொண்டது பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கர் இதில் தனிப்படக் கவனம் செலுத்தியிருந்தார்.

அவரது உத்தரவின் பேரில் ஜெனிவாவில் உள்ள பாகிஸ்தான் தூதுவர் சமீர் அக்ரம் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளை மூன்று முறை அழைத்து இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ளும்படி கேட்டிருந்தார்.

அவரது பிரசாரத்தின் மூலம் குவைத், மொரிட்டானியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பன தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. புர்கினோ பாசோ வாக்களிக்கவில்லை.

இந்த அமைப்பிலுள்ள லிபியாவும், சியராலியோனும் மட்டுமே ஆதரித்து வாக்களித்தன.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஏழு நாடுகளும் அமெரிக்கா பக்கம் சாய்ந்திருந்தால் இலங்கைக்கு ஆதரவாக 6 வாக்குகள் தான் கிடைத்திருக்கும்.

இந்த உறவின் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் கொழும்பு வரவுள்ள பாகிஸ்தான வெளிவிவகாரச் செயலர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் போன்றோரைச் சந்தித்து பேசவுள்ளார். இவையெல்லாம் இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் விடயங்கள்.

பாகிஸ்தான் இவற்றையெல்லாம் செய்வதற்கு காரணம் இலங்கை மீதான பரிவோ பாசமோ அல்ல. அது குறிவைத்துள்ளது இந்தியாவைத் தான்.

இலங்கையை வைத்து இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளிவிடப் பார்க்கிறது பாகிஸ்தான்.

காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்துவதிலேயே  பாகிஸ்தான் குறியாக உள்ளது.

ஆங்காங்கே காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்கள் பாகிஸ்தானின் கை அங்கு ஓங்குவதற்கான அறிகுறியாகவே தெரிகிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா என்ன செய்யும் என்பதைக் கணித்தே அதற்கு முரணான வகையில் பாகிஸ்தான செயற்பட்டது.

இதையே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி விடும் திட்டம் பாகிஸ்தானிடம் உள்ளது.

ஏற்கனவே 1994ல் காஷ்மீர் மனித உரிமை மீறல்களை ஐநாவுக்கு கொண்டு போய் இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது பாகிஸ்தான்.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் தனி ஈழத்துக்கு ஆதரவாக கிளம்பியுள்ள போராட்டம் இந்திய மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்துள்ளது.

மத்திய அமைச்சர் நாராயணசாமி தனி ஈழத்தை ஆதரிப்பது காஷ்மீரில் பாகிஸ்தான் தனது வேலையைக் காட்டுவதற்கு வழி ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளது இதையே காட்டுகிறது.

இவ்வாறாக பல்வேறு நாடுகளினதும் நிழல் யுத்த களமாக இலங்கை மாறியுள்ளது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இந்த தீவிர நிழல் யுத்தத்தை தனக்குச் சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை அரசாங்கம்.

இது இலங்கையை பேராபத்தில் தள்ளிவிடக்கூடிய வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.

சுபத்ரா
Leave a Reply

Your email address will not be published.