வடக்கில் மாகாணசபை அமைத்தால் அதன் ஊடாக ஈழம் உருவாகுவதைத் தடுக்க முடியாது என்று தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன. இந்தச் சதி முயற்சிக்கு இடமளிக்கக் கூடாது.
வடக்கில் மாகாணசபை அமைப்பதானது ஈழ இராச்சியத்தை உருவாக்குவதற்கான பாதையாகக் கருதப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வை நோக்கி நாட்டைத் தள்ளுவதே அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நோக்கமாக அமைந்துள்ளது.
நாட்டின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது. 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் வடக்கில் ஈழ இராச்சியம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது.
வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி ஈட்டும். அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கும். அதனால் நாடு பிளவடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.