தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இலங்கையில் நடந்த தமிழின படுகொலைக்கு எதிராக போராடி வருகிறார்கள். ராஜபக்சேவுக்கு எதிராகவும் ஈழமக்களுக்கு ஆதரவாகவும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். இதனால் அனைத்து கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்தது. ஆனாலும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் மனிதச் சங்ஙகிலி போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது ‘அரசு கல்லூரிகளை திறந்தாலும் எங்களின் போராட்டம் தொடரும். தமிழீழம் மலரும் வரையில் எங்களின் இந்த போராட்டம் ஓயாது. தினமும் கல்லூரிக்குள் நுழையும் முன்பாக அடையாளப் போராட்டத்தை நடத்திவிட்டே நுழைவோம். எந்த விதத்திலும் போராட்டம் தடைபடாது என்றனர்.
அதே போன்று திருவாரூரில் ஒன்றுகூடிய மாணவர்கள் மத்திய அரசு நிறுவனமான தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிட முனைந்தனர். அப்போது தடுக்க முற்பட்ட போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவையில் இலங்கை தூதர் கரியவாசத்தை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டதோடு இந்திய மத்திய அரசு கொலைகாரன் ராஜபக்சே நாட்டின் நட்புறவை முறித்துக்கொள்ள வேண்டும் எனவும் முழக்கமிட்டார்கள். விருதுநகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மாணிக்கதாகூரின் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டபோது போலீஸ் தடுத்த நிறுத்தியது.
தொடர்ந்து இப்படி போராடி வரும் மாணவர்கள் கல்லூரி திறக்கப்பட்டாலும், எங்களின் படிப்பு கெடாத வகையில், பெற்றோர்களின் ஆதரவோடு அடுத்தடுத்த போராட்ட வடிவத்தை முன்னெடுப்போம். ஈழ மண்ணில் நடந்த இனப்படுகொலை குறித்த படக் கண்காட்சிகளை வைத்து மக்களிடையே பிரச்சாரத்தை முன்னெடுபோம். தினமும் கல்லூரி வாசல் முன்பாக அடையானப் போராட்டத்தை தொடர்வோம் என்றும் தெரிவித்தார்கள்.