கூடன்குளம் அணுமின் உலையில் சோதனை ஓட்டம் : முற்றுகை போராட்டத்தால் பதற்றம்

கூடன்குளம் அணுமின் உலையில் சோதனை ஓட்டம் : முற்றுகை போராட்டத்தால் பதற்றம்

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதால் இம்மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று அணுமின் நிலைய இயக்குநர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நாளை நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தை அடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூடன் குளம் முதல் அணுமின் உலையில் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அங்கு சோதனை ஓட்டம் நடந்து வருவதை கூடன்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் நேற்று உறுதிசெய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மாதம் 24ஆம் தேதி சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் இது முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறினார். இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக அணுமின் நிலையத்தில் பலத்த சப்தம் கேட்பதாகவும், அங்கு ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அங்கு புகை கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே அணுஉலை எதிர்ப்பாளர்கள் நாளை அங்கு முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக உதயகுமார் அறிவித்துள்ளதை அடுத்து செட்டிகுளம் அணுவிஜய் நகர் மற்றும் கூடன்குளம் அணுமின் உலை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.