ஈழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
திருச்சியில் இலங்கை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈழத்திற்கான மாணவர் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு தகவல் பரவியது. போலீஸார் எச்சரிக்கை கொடுத்ததால் உடனடியாக இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு தாக்குதலுக்கு தப்பின.
இந்த நிலையில் இன்று, கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நிகின் லங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு திரண்டு வந்த மாணவர் கூட்டமைப்பினர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டுப் போட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட குழுவை சேர்ந்த சத்தியகுமாரன், பெருமாள் ஆகியோர், ”திருச்சியில் உள்ள சிங்களர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் இழுத்துப் பூட்டி இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் காலி செய்வோம். இதுவரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த நாங்கள் இனி மாற்று வழியில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்” என்று எச்சரித்தார்கள்.
நிகின் லங்கா அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டது தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் பத்துப்பேரை கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறது கண்டோன்மென்ட் போலீஸ். இதனால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.