பிரிட்டன் நாட்டின் ராணி, இரண்டாம் எலிசபெத்(86) லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் வாழ்ந்து வருகின்றார்.
கிரவுன் எஸ்டேட் என்றழைக்கப்படும் ராஜ வம்சத்திற்கு சொந்தமான எஸ்டேட்டின் சொத்துகள், பரம்பரை பரம்பரையாக அரச வம்சத்தின் வாரிசுகளுக்கு சொந்தமானதாக இருக்கும். அவற்றை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது.
இந்த கிரவுன் எஸ்டேட்டின் மொத்த மதிப்பு 12 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமானது ஆகும்.
இந்த எஸ்டேட் சொத்துகளின் மூலம் பிரிட்டன் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 240 மில்லியன் பவுண்டுகள் வருமானமாக கிடைக்கிறது.
இந்த வருமானத்தில் 15 சதவீதம் ஆண்டு தோறும் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டில் ராணியின் பங்காக 31 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டது. இந்த நிதியாண்டிற்கான பங்காக 5 மில்லியன் பவுண்டுகளை அதிகரித்து 36.1 மில்லியன் பவுண்டுகளை ராணியிடம் வழங்க கிரவுன் எஸ்டேட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அரண்மனை பணியாளர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் 10 மில்லியன் பவுண்ட் சம்பளமாக தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.