வடகொரியாவின் எல்லையில் உள்ள கேசோங் தொழிற்சாலைக்கு நேற்று வேலைக்கு வருகை தந்த தென்கொரியா தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை போர் நடைபெற்றது.
பின்னர், ஐ.நா. தலையீட்டின் பேரில் போர் நிறுத்தப்பட்டது. எனினும், வடகொரியா, தென்கொரியா இடையே தற்பொழுதும் கடும் பகை நிலவி வருகின்றது.
இந்நிலையில் தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா கடந்த 30ம் திகதி போர் பிரகடனம் செய்தது. தென்கொரியா மற்றும் அமெரிக்க பகுதிகள் மீது தாக்குதல் நடத்த தயார் என்றும் அறிவித்தது.
இதனால் எந்நேரத்திலும் போர் நிலவக்கூடும் என்ற அச்சம் வடகொரியாவில் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா, தென்கொரியா எல்லையில் கேசோங் தொழில் நகரம் உள்ளது. இது வடகொரியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. எனினும், இங்குள்ள கேசோங் தொழிற்நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட தென்கொரியா நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் வேலை பார்க்கும் தென்கொரியா தொழிலாளர்கள் நேற்று பணிக்கு வந்த பொழுது வடகொரிய அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டனர்.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையால், கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.