Search

எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! – தமிழ்க் கவி

தமிழ்க் கவி, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பல்வேறு சமூக ஆக்கங்களை ஈழத்துஊடகங்கள்,தமிழகஊடகங்கள்,புலம்பெயர்தேசத்து ஊடகங்கள் என்பனவற்றில் அவர் எழுதியிருக்கின்றார். தாயகத்தில் இருந்து அண்மையில் தமிழகம் சென்றிருந்த அவரை ஆனந்தவிகடன் செவ்விகண்டு வெளியிட்டுள்ளது. அதனை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம். மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவருகிறார்.

அவருடன் உரையாடியதில் இருந்து…

‘நீங்கள் சந்தித்த ஈழத்துக் கொடுமைகள் என்னென்ன?’ 

பதுங்கு குழியே படுக்கும் பாய் ஆகவும் செத்துவிழும் பாடையாகவும் மாறிப்போனது எங்களது வாழ்க்கை. ஆளுக்கு ஒரு மாற்றுத் துணி, குழந்தைகளுக்குக் கொஞ்சம் பால், குடிக்கச் சிறிதளவு தண்ணீர், கொஞ்சம் பருப்பு என இதை மட்டுமே தூக்கிக்கொண்டு… ஷெல் அடிக்கும் திசைக்கு எதிராக… காற்று அடிக்கும் திசையை நோக்கிச் சென்று
கொண்டே இருப்போம். ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்து அங்கு பதுங்கு குழி தோண்டுவோம். குழந்தைகளை அதில் படுக்கவைத்துவிட்டு, நாங்கள் களைப்பு தீருவதற்காகக் குழியின் மேல் அமர்ந்து இருப்போம். திடீரென ஷெல் தாக்குதல் ஏற்பட்டால், குழிக்குள் குதித்து விடுவோம். சில இடங்களில் மேற்கூரை அமைத்து, அதன் மேல், மணல் மூட்டைகளைவைத்து பாதுகாப்பாகச் சில நாட்கள் வசித்தும் இருக்கிறோம். அந்த நேரங்களில், உணவுக்காக நாங்கள் பட்டபாடு எதிரிக்குக்கூட நேரக் கூடாது.

ஆங்காங்கு இருந்த கிணறுகள் எங்கள் தாகத்தையும் பல நேரங்களில் பசியையும் தணித்தன. பெரியவர்கள் நாங்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தாலும், பாலுக்கு அழும் குழந்தையை என்ன செய்வது? ரூ. 245 மதிப்புள்ள பால் மாவுப்பைகள் ரூ.2,000 வரை விற்கப்பட்டன. கடைசியாக, அது ரூ. 3,000-க்குப் போய்விட்டது. சாயத் தண்ணீர் குடித்துதான் எங்கள் பிள்ளைகள் பிழைத்தன. எங்கள் குடும்பம் ஓர் இடத்தில் வசித்தபோது, என் மகன் இறந்துவிட்டதாகத் தகவல் சொன்னார்கள். அந்த நேரத்தில் நான் என் பேரப்பிள்ளைகளுக்கு பால் மாவு வாங்குவதற்காக அலைந்துகொண்டு இருந்தேன். என் கவனம் முழுவதும் கதறிக்கொண்டு இருந்த குழந்தைகள் மீதே இருந்ததால், அவர்கள் கூறிய தகவலைக் கேட்டும், `இங்கு எங்கே பால் கிடைக்கிறது?? என்றுதான் விசாரித்துக்கொண்டு இருந்தேன்.

ரொம்ப நேரம் அலைந்து கொஞ்சம் பால் மாவு வாங்கி வந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டேன். அன்று இரவுதான், திடீரெனத் தோன்றியது. மகன் இறந்துவிட்டதாகச் சொன்னார்களே என்று! சற்றுத் தொலைவில் என் மகள் ஒரு பதுங்கு குழியில் இருந்தாள். உடனே, சென்று அவளுக்குத் தகவல் சொன்னேன். அப்போதுகூட எங்களுக்கு அழுகை வரவில்லை. இதுதான் அனைத்து மக்களின் மனநிலை. இலங்கையில் வசிக்கும் தமிழர்
களுக்குக் கண்ணீர் என்பதே கிடையாது. அது எந்தக் காலத்திலோ வற்றிவிட்டது.’

‘நீங்கள் பிரபாகரனைச் சந்தித்து இருக்கிறீர்களா?’ 

‘தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தேன். அங்கு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். பல நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்த தலைவர், என்னைப் பல முறை அழைத்துப் பேசிப் பாராட்டி இருக்கிறார். நான்கு முறை அவரிடம் விருது வாங்கி இருக்கிறேன். மூன்று முறை அவருடன் சேர்ந்து உணவருந்தி இருக்கிறேன். என் நிகழ்ச்சிகள் குறித்த அவரது கருத்தை, பிறர் மூலமும் சொல்லி அனுப்பி என்னைப் பரவசப்படுத்தி இருக்கிறார். தமிழ்ப் பண்பாடு குறித்து நிறையப் பேசுவார். அவர் என்னுடைய விசிறி என்று சொல்லியதாகச் சொல்வார்கள். ஒரு முறை மேடை நாடகம் ஒன்று நடத்தினேன். அதற்கு வந்திருந்தவர், நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னை அழைத்துப் பாராட்டினார். அப்போது, நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
அவருடன் வந்திருந்த மெய்க்காப்பாளர்கள், `அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இதற்கு மேல் அனுமதிக்க முடியாது? என்று கூறினர். தலைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றார். தலைவரைப் பற்றிய நினைவுகள், அவருடைய கருத்துக்கள் என்னுள் இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன… இருக்கும்.’


‘பிரபாகரன் இறந்துவிட்டதாகச் சொல்வது உண்மையா?’

2009 மே 19-ம் திகதி அவர் இறந்துவிட்டதாக இராணுவம் அறிவித்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 14.05.2009ம் திகதி, தனது நண்பர்களுடனும் வளர்ப்பு நாய்களுடனும் கடற்கரையில் தலைவர் பிரபாகரன் நடந்து செல்வதை நான் பார்த்தேன். அப்போது, அவர் சிவிலியன் உடையில்தான் இருந்தார். (அதாவது புலிகளின் சீருடையில் இல்லை!) ஆனால், 19ம் திகதி பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக இராணுவம் அறிவித்தது. அது, போர் முனையில் இருக்கும் புலிகளை நிலைகுலையவைக்க இராணுவம் செய்த சதி என்றுதான் நம்பினோம். அதற்கு முன்பே போர்க்களத்தில் இருந்து அவரை வெளியேற்றத் தளபதிகள் எவ்வளவோ முயற்சி எடுத்தனர்.

ஆனால், தலைவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘கடைசி வரை தமிழர்களுக்காகப் போராடுவேன்’ என்று கூறிவிட்டார். குண்டடிபட்டு இறந்தது பிரபாகரன்தானா என்று இலங்கை இராணுவத்துக்கு மட்டும் அல்ல… அவர் உடலை அடையாளம் காட்டியவர்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் மரணச் சான்றிதழ் தரவில்லை.’ ‘இறுதிக்கட்டப் போர் நடந்த நேரத்தில் பிரபாகரனுடைய திட்டம் என்னவாக இருந்தது என அறிவீர்களா?’ ‘போர் உக்கிரம் அடைந்திருந்த நேரத்திலும் நம்பிக்கையை இழக்காமல் மன உறுதியோடுதான் இருந்தார். 2008ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி இயக்கத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைவர் பிரபாகரன், ‘இப்போது நம்மிடம் தேவையான அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆயுதங்கள் இல்லை. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் உதவியுடன் இலங்கை இராணுவம், நவீன ஆயுதங்களால் நம்மைத் தாக்குகிறது. இருந்தாலும், நாம் கடைசி வரை போராடுவோம். நான் வீரமரணம் அடைந்தால், இந்த உரிமைப் போரைத் தமிழர்கள் நிறுத்திவிடக் கூடாது.
எனக்கு அடுத்து யார் இருக்கிறார்களோ… அவர்கள் ஒற்றுமையுடன் இந்தப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இதுதான் நமது இலட்சியம்’ என்று முழங்கினார். 10 நிமிடங்கள்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது நானும் இருந்தேன். தலைவர் உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் கூரை பிரிக்கப்பட்டு, அங்கு கூட்டம் நடந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்குத் தடயங்கள் அழிக்கப்பட்டன.’

‘இன்றைய நிலைமைகளைச் சொல்லுங்கள். மீள்குடியேற்றம் என்பது சரியாகத்தான் நடக்கிறதா? இராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த தமிழர்கள் தங்களுடைய சொந்த இடத்துக்கு முழுமையாகத் திரும்பிவிட்டார்களா?’ ‘50 சதவிகிதத் தமிழர்கள்தான் இதுவரை விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கும் வீடுகள் இன்னும் கட்டித் தரப்படவில்லை. நாலு தகர ஷீட், நான்கு கொம்புகள், நாலு மூட்டை சிமென்ட் இவைதான் கொடுக்கின்றனர். இதை வைத்து நாமாக வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். இலங்கை இராணுவம் இதுவரை 50 வீடுகளைத்தான் தமிழர்களுக்குக் கட்டித் தந்துள்ளது. தமிழர்கள் வசித்த பகுதிகளில், சிங்களர்களும் இராணுவத்தினரும் குடி அமர்த்தப்பட்டு உள்ளனர். இராணுவத்தினர் பல்வேறு தொழில்களைத் தொடங்கிவிட்டனர். சலூன் கடைகூட இராணுவ வீரர்கள்தான் நடத்துகின்றனர். போரில் ஏராளமான குண்டுகள் விழுந்ததால், பல இடங்களில் விவசாயம் செய்யும் தன்மையை நிலம் இழந்துவிட்டது. தமிழர்கள் கூலி வேலைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் அக வாழ்க்கை மட்டும் அல்ல… புற வாழ்க்கையும் இருட்டாகத்தான் இருக்கிறது’
‘இப்படிப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புகிறீர்களா?’ ‘நிச்சயமாக! இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!’
ஆக்கம்: எஸ்.கோபாலகிருஷ்ணன்
நன்றி – ஆனந்தவிகடன்  



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *