மக்களின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார்.
காணியில்லாமல் 30 வருடங்களாக நாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆதரவாளர்களுக்குக் காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிக்கின்றார் என ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் குற்றஞ்சாட்டினர்.
முள்ளியவளை ஆறாவது மைல்கல் அருகில் 540 ஏக்கர் தேக்கங்காடு உள்ளது. இந்தக் காட்டை முற்றாக அழித்து அந்தப் பகுதியில் தனக்கு ஆதரவான ஆயிரத்து 445 குடும்பங்களைக் குடியேற்றுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்காக குறித்த பிரதேசத்தை நிலஅளவை செய்வதற்காக கடந்த மாதம் 21ம் திகதி நில அளவையாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களை நிலஅளவை செய்யவிடாமல் முல்லைத்தீவு மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பி அனுப்பினர்.
இவ்வாறானதொரு நிலையில் முல்லைத்தீவுக்கு நேற்று சனிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக அமைச்சர் ரிஷாத் சென்றிருந்தார். இதன்போது அமைச்சர் காட்டை அழித்து அந்தப் பகுதியில் தனது ஆதரவாளர்களை குடியேற்றும் திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக அவரது ஆதாரவாளர்களும் அங்கு அமைச்சரால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
நேற்றுக்காலை குறித்த காட்டுப்பகுதியின் அருகே 5 பைக்கோ இயந்திரங்கள் சகிதம் அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கு வந்து இறங்கினர். இதனை அறிந்து கொண்ட முல்லைத்தீவு மக்கள் நேற்றுக் காலை 7 மணிமுதல் மேற்படி காட்டுப் பகுதியில் குவிந்தனர்.
எங்களுக்கு காணிகள் வழங்காமல் இந்தக் காட்டை வெட்ட முற்பட்டால் “பைக்கோ’ இயந்திரங்களை அடித்து நொருக்குவோம்” எனத் தெரிவித்து அமைச்சரின் ஆதரவாளர்களை எச்சரித்தனர் முல்லைத்தீவு மக்கள். அத்துடன் “பைக்கோ’ இயந்திரங்களுக்கு குறுக்காக படுத்து அவற்றை நகரவிடாமல் செய்தனர்.
மக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் நேற்று நண்பகல் வரை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வரவில்லை. இறுதியில் நேற்று மாலை 4.30 மணியளவிலேயே அமைச்சர் ரிஷாத் அங்கு வந்தார். இதனையடுத்து அங்கு திரண்டிருந்த முல்லைத்தீவு மக்கள் அமைச்சருக்கு எதிராகக் கொந்தளித்தனர்.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 940 குடும்பங்கள் காணியில்லாமல் உள்ளனர். எங்களுக்கு காணிகளை வழங்காமல் உங்கள் ஆதரவாளர்களுக்கு இங்கு காணிகள் வழங்கவிட மாட்டோம்.
நாங்கள் அளித்த வாக்குகளில் தான் நீங்கள் அமைச்சரானீர்கள். இப்போது உங்கள் ஆதரவாளர்களுக்காக மாத்திரம் செயற்படக்கூடாது. அதற்காக நாங்கள் வாக்களிக்கவில்லை என்று மக்கள் ஒரே குரலில் திட்டவட்டமாகத் தெரிவித்து விடாப்பிடியாக இருந்தனர். மக்களின் கடும் எதிர்ப்புக்கு அமைச்சரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சித் திணைக்களத்தில் பணியாற்றும் விஜிந்தன் என்பவர் அமைச்சருக்காக வக்காளத்து வாங்கி முல்லைத்தீவு மக்களிடம் வாங்கிக்கட்டினார்.
மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியின் ஒரு கரையான முள்ளியவளை மேற்கில் உங்களுக்கு காணிகள் தரமுடியும். முள்ளியவளை மத்தியில் ஆதரவாளர்களைக் குடியமர்த்த விடுங்கள் என விஜிந்தன் முல்லைத்தீவு மக்களிடம் கேட்டார்.
மக்கள் அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்ததுடன் தமது முடிவிலும் உறுதியாக இருந்தனர். இதனால் ஒன்றரை மணி நேரமாக மக்களுடன் வாக்குவாதப்பட்ட அமைச்சர் ரிஷாத் இறுதியில் திங்கட்கிழமை (நாளை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரச அதிபருடன் கலந்துரையாடல் நடத்திவிட்டு முடிவைக் கூறுவதாக சொல்லி அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார். அவரின் ஆதரவாளர்களை குடியேற்றும் ஆரம்ப முயற்சியும் இதனால் பிசுபிசுத்துப்போனது.
இதேவேளை நேற்று குறித்த பகுதியில் படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் எனப் பல நூற்றுக்காணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். குறித்த இடத்தில் காட்டை அழித்துவிட்டு மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.