எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம்! சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்கா

எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம்! சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்கா

கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக சீனாவின் உதவியை அமெரிக்கா நாடி உள்ளது.

அமெரிக்கா, தென்கொரிய பகுதிகள் மீது எந்த நேரத்திலும் ஏவுகணையை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் போர் பதற்றத்தை தணிப்பதற்காக சீனாவின் உதவியை அமெரிக்கா நாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், தொடர்ந்து மிரட்டி வரும் வடகொரியா தனது நிலையை மாற்றிக் கொள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை நிறுவுவது, போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளது குறித்து சீனாவிடம் அமெரிக்க அதிகாரிகள் விளக்கி உள்ளனர். மேலும் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் பலர் சீனா செல்ல உள்ளனர்.

போர் மூண்டால் வெளிநாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்பதால் அனைவரும் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனது கிழக்கு எல்லையில் இரண்டு மத்திய தூர ரக ஏவுகணைகளை ஏவுவதற்காக தயார் நிலையில் வடகொரியா வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை சோதனை செய்யப்படாத 3000 முதல் 4000 கி.மீ தூரம் வரை செல்லும் முசுடான் ஏவுகணையைக் கொண்டு தென்கொரியா மற்றும் ஜப்பானில் எந்த பகுதியையும், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவையும் தாக்க முடியும்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: முசுடான் ஏவுகணை சோதனை நடத்தவும் வடகொரியா தயங்காது. சர்வதேச விதிகளை வடகொரியா கடைப்பிடிக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் அச்சோதனை மேற்கொள்வது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும். ஏவுகணை சோதனை மேற்கொண்டால் அமெரிக்கா அதை கடுமையாக எடுத்துக் கொள்ளும் என எச்சரித்துள்ளது.

இதற்கிடையே ஜப்பானில் ஆளில்லா உளவு விமானங்களை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் கொரிய தீபகற்ப பகுதியை தீவிரமாக கண்காணிக்க முடியும். வடக்கு ஜப்பானில் உள்ள மிஸ்வா விமானப்படை தளத்தில் உளவு விமானங்கள் நிறுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.