ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், பாகிஸ்தான் தனது மண்ணில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது.
எனினும் தனது அணுசக்தி திட்டங்கள், காஷ்மீர் தீவிரவாதிகள் பயிற்சி பெறும் மலைப்பிரதேசங்கள் மீது ஆளில்லா விமானங்கள் பறக்கக் கூடாது என்ற நிபந்தனைகளின் பேரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனங்கள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் மட்டும் ஆளில்லா விமானத்தை இயக்கலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆளில்லா விமானத் தாக்குதலின் போதும் பாகிஸ்தானிடம் அனுமதி பெற வேண்டும். தாக்குதல் இலக்கு குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் தலிபான்களின் நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தான் பழங்குடியின தலைவர் நெக் முகமதுவை கொல்ல சிஐஏ ஒப்புக் கொண்ட பின்னரே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போது தொடங்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தற்போதைய அதிபர் ஒபாமா காலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.