‘ஈழமே பாதுகாப்பு என்பதை இந்தியா விரைவில் உணரும்’ – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய செவ்வி

‘ஈழமே பாதுகாப்பு என்பதை இந்தியா விரைவில் உணரும்’ – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய செவ்வி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடனான நேர்காணலொன்றை இந்தியாவிலிருந்து வெளிவரும் தமிழ் ஆழி தனது ஏப்ரல் 2013 இதழில் வெளியிட்டுள்ளது. அதன் ஆசிரியர் செ.ச.செந்தில்நாதனுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அளித்த பேட்டியிலிருந்து…

ஜெனீவாவில் ஏற்கப்பட்ட தீர்மானம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? நாம்  ஓரடி முன்னே சென்றிருக்கிறோமா பின்னடைவைச் சந்தித்திருக்கிறோமா?

தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையில் உள்ள மோதலைப் பற்றிப் பேசாமல் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புச்சாட்டுதல்| என்கிற கருத்தை மையப்படுத்தியது எனக் கருதப்படுகிற இந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களுக்கு உண்மையிலேயே எந்தச் சாதகமும் இல்லை. மாறாக இந்த இரண்டாம் தீர்மானம் எல்எல்ஆர்சி என்கிற கருத்தாக்கத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. 2013இல் வடக்கு மாகாணத்தில் கவுன்சில் தேர்தலை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதை அது முதன்முறையாக வரவேற்றுள்ளது.

எல்எல்ஆர்சி என்பது அடிப்படையிலேயே பிழையான முயற்சி. குற்றம்சாட்டப்பட்டவரையே அது விசாரணை அதிகாரியாக நியமித்திருக்கிறது. இயற்கை நீதியை இது எள்ளி நகையாடுகிறது. அது மட்டுமல்ல, மிகப் பெரும்பான்மையான தமிழர்கள் எல்எல்ஆர்சி கூட்டங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். அதன் முன் ஆஜராக மறுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கமிஷனின் அறிக்கையைத்தான் நல்லிணக்கத்துக்கான பரிகாரம் என ஜெனீவாத் தீர்மானம் கருதுகிறது. இலங்கையின் வடகிழக்கில் தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை அமைப்புரீதியில் திட்டமிட்டு உடைத்தெறியக்கூடிய, தமிழர்களைக் கரைத்து  அடையாளமின்றி ஆக்கக்கூடிய செயல்திட்டத்தையே அந்தத் தீர்மானம் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இலங்கை அரசுக்கு இது காலம் கடத்தும் செயல்பாடுமாகும்.  தமிழ்த் தேசத்தை அழிப்பதற்காகவே அவர்கள் கால அவகாசமும் இடமும் கேட்கிறார்கள்.

முந்தைய தீர்மானத்தைப் போலல்லாமல் இது மாகாணக் கவுன்சில் அமைப்பு முறை பற்றிப் பேசுகிறது. 1987இன் இந்திய _ – இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கை அரசியல்சாசனத்தில் 13ஆம் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது இந்தக் கவுன்சில் முறை. உருவாக்கப்பட்ட காலத்தி லிருந்தே தமிழர்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் யோசனைதான் இந்த 13ஆம் சட்டத் திருத்தம். எங்களைத் தேசமாக அங்கீகரியுங்கள், எங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்குப் பக்கத்தில்கூட இது வரவில்லை. அமெரிக்கத் தீர்மானம் இதை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதற்குச் சட்டபூர்வ அங்கீகாரத்தைத் தர முனைகிறது. இதன் மூலமாகத் தமிழர்களின் போராட்டத்தை 26 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்துச்செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை விஷயத்தில் மேற்குலகமும் கடுமையாக நடந்து கொள்ளும் என்று பல காரணங்களால் கருதப்பட்டது. ஆனால் இறுதியில் இலங்கையே வெற்றி பெற்றுவிட்டதாகத் தோன்றுகிறது. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

இலங்கையில் ஷநல்லிணக்கமும் பொறுப்புச்சாட்டுதலும்| உருவாவதற்காக இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை என்பதே நாங்கள் ஆய்ந்தறிந்த கருத்து. இது மேற்குலகு மற்றும் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களின் அடிப் படையிலேயே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே நினைக்கிறோம். தமிழர்கள்மீது நடத்தப்பட்ட இனப் படுகொலையைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கை அரசின் மீது போதுமான அளவுக்கு நிர்பந்தம் செலுத்தி, ஆட்சி மாற்றத்தை இலங்கையில் நிகழ்த்திக்காட்டுவதே  மேற்குலகின், இந்தியாவின் நோக்கம். அதாவது சீனாவின் சார்பாக அல்லாமல், தங்கள் சார்பான அரசு அங்கே இருக்க வேண்டும் என்பதே அவற்றின் நோக்கம். அப்படி அவர்கள் எதிர்பார்க்கும் நேச அரசுக்கு நாளை நெருக்கடி வரக் கூடாது என்பதற்காக, மோதலின் அடிப்படைக் காரணங்களைத் தீர்க்கக்கூடிய எந்தக் கடினமான சூழலையும் உருவாக்க இந்தியாவும் மேற்குலகமும் விரும்பவில்லை.

 

தமிழர்களைத் தனித் தேசிய இனமாக  சிங்களர்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை. தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதாகச்  சிங்களத் தலைவர் ஒருவர் கூறுவாரேயானால் சிங்களர் கள் அவரை நிராகரித்துவிடுவார்கள். ஆனால் இனப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தமிழ்த் தேசியத்தை அங்கீகரிப்பதுதான் என்பதை நாம் அறிவோம். மேற்குலகமும் இந்தியாவும் இதை அறியும். ஆனால் இதை அவர்கள் தங்கள் அதிகாரபூர்வக் கொள்கையாக அங்கீகரிக்கமாட்டார்கள். அப்படி ஏற்றால் இலங்கையில் அவர்களால் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தவோ தங்களுக்கு நேசமான அரசாங்கத்தை உருவாக்கவோ முடியாது. சீனாவுக்கு ஆதர வான (இந்திய, அமெரிக்க நலன்களுக்கு எதிரான) ராஜபட்சே அரசின் கொள்கைகளைச் சிங்கள மக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதால், தங்களுக்கு ஆதரவான அரசை இலங்கையில் நிறுவ முடியாது என்னும் உண்மை உரைக்கும்போதுதான் மேற்குலகும் இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிரச்சினையைக் காத்திரமாக அணுகும்.  எவ்வளவோ நிரூபணங்கள் குவிந்தபோதும் இப்படிப்பட்ட தீர் மானத்தை அவை கொண்டுவந்ததற்கு இதுவே காரணம்.

 

உலகிலேயே மிகவும் வல்லமையான ஒரு நாடும் இந்தப் பிராந்தியத் திலேயே மிகவும் வல்லமையான ஒரு நாடும் நினைத்தால், மற்ற நாடுகளைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவது பிரச்சினையே அல்ல. அமெரிக்கா, இந்தியா, மேற்குலகம் ஆகிய மூன்றுக்குமே அத்தகைய வைராக்கிய எண்ணம் இல்லை.

இந்தமுறை இலங்கையின் ராஜதந்திர வியூகம் வெற்றிபெற்றதா தோல்வியடைந்ததா? தீர்மானம் தொடர்ச்சியாகப் பலவீனமடைந்து கொண்டேவந்ததோ?

 

இலங்கையின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் விதமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இலங்கை அரசின் ராஜதந்திர நகர்த்தல்கள் தோல்வியடைந்தது தெரிகிறது. இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்கு ராஜதந்திரரீதியிலான தர்மசங்கடமே. ஆனால் இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கும் தோல்வியே. ஏனென்றால் அது எல்எல்ஆர்சி, பொறுப்புச்சாட்டுதல், மாகாணக் கவுன்சில் போன்றவற்றையே பேசுகிறது. இந்தத் தீர்மானம் தமிழர்களுக்குத் தோல்வி என்பதால் இலங்கையின் வெற்றியாகிவிடாது. அதேபோல, இது இலங்கையின் தோல்வி என்பதால் தமிழர்களின் வெற்றியாகிவிடாது. இதில் நாம் தெளிவாக இருந்தாக வேண்டும்.

 

இந்தத் தீர்மானத்தைப் பலவீனப்படுத்தவே அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பின என்பதா லேயே இது பலவீனப்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை.  நான் முன்பே சொன்னதுபோல, இலங்கையில் அமெரிக்க, இந்திய சார்பான ஆட்சி மாற்றம் நடத்தப்படவேண்டும் என்பதுதான் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கமே தவிர வேறு எதுவுமில்லை. ஆட்சி மாற்றம் என்கிற இலக்குக்குக் குந்தகம் இல்லாதவகையில்,  தீர்மானத்தின் ஷரத்துகளை வலு விழக்கச்செய்வதில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. தமிழர்களின் பிரச்சினையைக் காத்திரமாக அணுகுவது அமெரிக்காவின், இந்தியாவின் திட்டமல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு அது அவற்றின் திட்டத்தில் இல்லை. ஒருவேளை ஆட்சிமாற்றம் தொடர்பான திட்டம் சரிவரச் செயல்படா விட்டால் அமெரிக்கா வேறு வழி முறைகளை முயன்று பார்க்கக்கூடும்.

இந்த முறை தமிழ் அமைப்புகள் சாதித்தவையும் சாதிக்க முடியாமல் போனவையும் எவை?

இது நமக்கு அப்பட்டமான முழுமையான தோல்வியாகும். தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) போன்ற அமைப்புகள் ஷபிரதிநிதித்துவ|ப்படுத்துகிறவரையில் இது போன்ற தோல்விகள் தொடரும் என்பதே உண்மை. அமெரிக்க _ – இந்தியச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி தமிழர்களிடம் லாபி செய்வதே டிஎன்ஏயின் இன்றைய வேலையாகிவிட்டது. ஆனால் அது அமெரிக்காவிடமும் இந்தியாவிட மும் தமிழர்களுக்காக லாபி செய்திருக்க வேண்டும். இந்தத் தீர்மானம் தங்களுக்கு ஷமகிழ்ச்சி| அளிக்கிறது என்று சொல்லுமளவுக்கு அவர்கள் போய்விட்டார்கள்!

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாணவர் போராட்டத்தை ஈழத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

 

இன்று எங்களுக்கு நம்பிக்கையின் கீற்றாகத் தெரிவது தமிழக மாணவர்களின் போராட்டம் மட்டுமே. தமிழகத்தின் சமீபகால வரலாற்றிலேயே மிகப் பெரிய போராட்டத்தை அவர்கள் நடத்து கிறார்கள் என்பதால் மட்டுமே  நான் இதைச் சொல்லவில்லை. உலக அரசியலைத் தமிழக மாணவர்கள் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள் என்பதாலும் இதைச் சொல்கிறேன். தெற்காசியாவிலும் இலங்கையிலும் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய குழாம்களின் புவிசார்ந்த அரசியல் அம்சங்களை அவர்கள் மிகவும் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள தமிழர்களின் புவிசார் மதிப்பு என்ன என்பதையும் அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுதான் இந்தப் போராட்டத்துக்கு வடிவம் தந்திருக்கிறார்கள்.

 

இந்தப் போராட்டம் மிகவும் தாமதமாகத் தொடங்கப்பட்டது. எனவே இந்தத் தடவை அது தீர்மானத்தின் மீது எந்தத் தாக்கத் தையும் செலுத்த முடியவில்லை எனச் சொல்லலாம். ஆனால் போராட்டம் நீடித்தாலும் வளர்ந் தாலும் எதிர்காலத்தில் அதன் தாக்கம் மிகவும் தீவிரமானதாக இருக்கும். ஜெனீவாவில் ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரத் தூதர் பேசுகையில், தமிழக மாணவர்களின் போராட்டத்தை அமெரிக்கா கவனித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். இந்தப் பிராந்தியத்தில் தமி ழக மாணவர்களின் போராட்டம் இனி எத்தகைய தாக்கத்தை உருவாக் கக்கூடும் என நாம் எதிர்பார்ப்பதற்கு இது சிறந்த அறிகுறி.

 

இடைக்கால நிர்வாக அவை குறித்து நீங்கள் பேசிவருகிறீர்கள். 2003இல் வடகிழக்கில் யதார்த்தத்தில் புலிகளின் ராஜ்யம் இருந்தபோதே இடைக்கால சுயாட்சி ஆணையம் போன்றவை நடைமுறையில் ஏற்கப் படவில்லை. இடைக்கால நிர்வாக அரசு ஒன்றை உருவாக்கும் அளவுக் கான ராஜதந்திர வலிமைகளும் பிற வலிமைகளும் நம்மிடம் உள்ளனவா?

 

இலங்கையிடமோ சர்வதேசச் சமூகத்திடமோ சென்று அவை ஷஏற்றுக்கொள்ளத்தக்க| கோரிக்கைகள் எவை எனக் கருதி அவற்றின் அடிப்படையில் எங்கள் கட்சி கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. தமிழர்கள்மீது இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அமைப்புரீதியிலான இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்துவதற்கு எது வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் என்கிற தர்க்க ரீதியிலான முடிவில் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். சிங்கள ஆதிக்கத்தில் இருக்கும்வரை, ஈழத் தமிழர்களின் தாயகம் அழிவை மட்டுமே சந்திக்கும். நிலைமாறு காலகட்ட நிர்வாகம் ஒன்று வேண்டும் என நாங்கள் கேட்பதற்கு இது முதல் காரணம்.

 

இரண்டாவது, அன்று புலிகள் இடைக்கால அரசு கேட்ட காலமும் இன்றைய காலமும் வௌ;வேறு. இலங்கையில் சீனா நுழைந்ததால், இன்று தமிழ் மக்களின் புவிசார் அரசியல் மதிப்பு வலுவடைந்திருக் கிறது. இலங்கை விவகாரத்தில், அமெரிக்காவும் இந்தியாவும் சிங்கள அரசுக்கு எதிராகக் காய் நகர்த்த வேண்டும் என்றால் அவை தமிழர்களின் அரசியலைத்தான் கையிலெடுக்க வேண்டிவரும். இதனால்தான் தமிழர்களின் துய ரத்தை இன்று அவை ஜெனீவாவில் இலங்கையின் மீது நிர்பந்தம் தரப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

 

தமிழக மக்களுக்கு இன்று கிடைத்துள்ள புவிசார் அரசியல் வெளியை நாம் எப்படிப் பயன் படுத்திக்கொள்வது எனத் தீர்மானிப் பது இனி நம் கையில்தான் இருக்கிறது. இந்திய, அமெரிக்க, சீனக் குழாம்களின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த, புவிசார் அரசியல் நலன் களை நாம் புரிந்துகொள்ளத் தவறினால் நம் மக்களுக்குப் பலனளிக் கக்கூடிய எந்த வியூகத்தையும் நாம் வகுக்க இயலாது. நாம் ஒன்றிணைந்து விட்டுக்கொடுக்காமல் வைராக்கியத்துடன் நின்றால், நம் வழிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கத்துடனாவது வரக்கூடிய காலம் நிச்சயம் உருவாகும்.

 

இலங்கையில் காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் சந்திப்புதான் போராட்டத்தின் அடுத்த மைல்கல்லாக இருக்கும். உங்கள் வியூகம் என்ன?

 

இந்தக் கூட்டம் இலங்கையில் நடைபெறக் கூடாது என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. நடைபெற்றால் அது இலங்கையின் உள்விவகாரங்கள் சுமூகமாகவே இருக்கின்றன என உலகம் நினைப்பதாக அர்த்தம்.

இறுதியாக ஒரு கேள்வி:  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பது அல்லது குறைந்தபட்சம் நடு நிலைமையுடனாவது நடந்துகொள்ளும்படி இந்தியாவை ஏற்கவைப்பதற்கான உங்களுடைய வியூகம் என்ன?

இலங்கையிலும் இந்தப் பிராந்தியத்திலும் உள்ள புதிய புவிசார் அரசியல் சூழலில் ஈழத் தமிழர்களை ஒரு தேசத்தவர்களாக அங்கீகரித்து, அவர்களுக்குப் பாதுகாப்பை அளிப்பதே தனது நலன்களுக்கு இசைவானது என்பதை இந்தியாவை உணரச் செய்ய வேண்டும். ஏனெனில் தனக்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிராக இந்தியா பயன்படுத்தக்கூடிய ஒரே சக்தி ஈழமே. இலங்கையில் இந்தியாவின் உண்மையான, இயற்கையான நேச சக்தியாகவும் சிங்கள அரசுக்கு எதிராகப் பயன்படக்கூடிய ஆயுதமாகவும் இருப்பது ஈழத் தேசமே என்பதையும் அதை இழப்பது மிகப் பெரிய அபாயம் என்பதையும் இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் கட்டாயம் ஏற்படத்தான் போகிறது. உலகத் தமிழர்களின் மக்கள் சக்தியால்தான் இதைச் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில் தமிழக மாணவர்களின் போராட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது என்றே கூற வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published.