யுத்தமுடிவின் பின்னும் வடகிழக்கில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ள கொடூரங்கள் பாரிய இன இன அழிப்பு

யுத்தமுடிவின் பின்னும் வடகிழக்கில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ள கொடூரங்கள் பாரிய இன இன அழிப்பு

முதலில் இந்தியா இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்…

யுத்தமுடிவின் பின்னும் வடகிழக்கில்  தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ள கொடூரங்கள் பாரிய  இன  இன அழிப்பு

 

யுத்தம் முடிவடைந்தும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்கள் பாரியதோர் ஒரு இன அழிப்பு என்பதை முதலில் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று யாழ்.சென்றுள்ள இந்திய பாராளுமன்ற குழுவிடம் தமிழ் தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழர் தாயகப் பகுதியில் நடைபெறும் வன்முறைகள் அனைத்தும் தமிழ் இன அழிப்பின் ஒவ்வொரு பாகங்கள் என்பதை இந்திய அரசாங்கம் புரிந்து கொள்ளும் வரையில் தமிழர்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வினை இந்திய அரசாங்கத்தினால் ஒருபோதும் முன்வைக்க முடியாது என்றும் தமிழ் தரப்புகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் நடைபெறும் இந்த இன அழிப்பை தடுத்து நிறுத்தாவிட்டால் இன்னும் 5 வருடங்களில் தழிழர் தாயகம் என்பதும், தமிழர்களும் அடையாளம் இல்லாத அளவு அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றும் மேலும் தமிழ் தரப்புகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்றக் குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்தினை சென்றடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் சென்ற குழுவினரை யாழிலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் வே. மகாலிங்கம் வரவேற்றார். இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சௌகத்தா றோய், சந்தீப் தீக்த், அனுரா தக்கூர் தனஞ்சய சிங், கௌட் யஸ்கி மற்றும்  பிரகா ஜவதேகர ஆகியோரும்  இந்திய வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாகத்தின் சிறப்பு செயலாளர் பி.எஸ். இராகவன், இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகருமமான பிமல் ஜுல்கா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இரண்டு நாட்கள் வட மாகாணத்தில் தங்கியிருந்து இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை இக்குழுவினர் பார்வையிடவுள்ளனர். யாழ்.சென்றுள்ள மேற்படி குழுவினர் யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், சமயப்பெரியார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்; அடங்கிய சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர். மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

இச்சந்திப்பின் போதே தமிழ் தரப்புக்கள் பாகுபாடுகளை மறந்து ஓரே குரலில் மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் சிறிலங்கா அரசாங்கம் வட-கிழக்கில் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழர்களுடைய இன அழிப்பு என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. இதனை சர்வதேசம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு நடைபெறும் இன அழிப்பிற்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் முழுமையாக அழிந்து விடுவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கப் போவதில்லை. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் இந்திய அரசாங்கத்தின் முழுப்பார்வையின் கீழ் இடைக்கால நிர்வாகசபை ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் இலங்கையை இனப்படுகொலை அரசு என தமிழ் தரப்புக்கள்   எடுத்துக்கூற முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த  குழுவினர் அதிர்ச்சியுடன் அதனை செவிமடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.