13 ம் திருத்தச் சட்டத்தில் எந்தப் பயனும் இல்லை. இடைக்கால நிர்வாகம் உடனடியாக வேண்டும்- சிவில் சமூகம்

13 ம் திருத்தச் சட்டத்தில் எந்தப் பயனும் இல்லை. இடைக்கால நிர்வாகம் உடனடியாக வேண்டும்- சிவில் சமூகம்

13 ம் திருத்தச் சட்டத்தில் எந்தப் பயனும் இல்லை. இடைக்கால நிர்வாகம் உடனடியாக வேண்டும் என இந்திய எம்பிக்கள் குழுவிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் சிவில் சமூகமும் வலியுறுத்தியுள்ளது. இன்றிரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் அமைப்பு இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில்  இந்தியாவில் இருந்து வருகைதந்த பாராளுமன்றக் குழுவினருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று சந்திப்பை மேற்கொண்டது. அச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவிக்கையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் தற்போதும் தமிழ்த் தேசத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு சார் இன அழிப்பு செயற்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாமல் செய்வதற்காக சிறீலங்கா அரசு திட்டமிட்ட இன அழிப்புச் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது என்பதனை தெளிவுபடுத்தினார்.

 

சிறீலங்கா அரசு போரை வெற்றி கொள்வதற்கு முழுமையான ஆதரவு வழங்கிய இந்திய அரசுக்கு இந்த அழிவில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது என்றும் இந்த அழிவில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்வதற்கு 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை எந்த பயனுமற்றது என்றும் சுட்டிக்காட்டினார். இது இந்தியாவிற்கும் நன்றாகத் தெரிந்திருந்தும் 13ஆம் திருத்தச் சட்டத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், தெளிவுபடுத்தினார்.

மேலும் தற்போது தமிழ் மக்கள் சந்திக்கும் அழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்காக இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு வெளியே ஓர் இடைக்கால அரசு ஒன்றினை சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் உடனடியாக ஏற்படுத்துவதற்கு இந்தியா முன்னின்று செயற்பட வேண்டுமெனவம் வலியுறுத்தினார். இது தவிர்ந்து வேறு எந்தவொரு நடவடிக்கையும் தமிழின அழிப்பை தடுக்காது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று மன்னார் ஆயர் அதி வண. இராயப்புயோசெப் தலைமையிலான சிவில் சமூகத்தினரும் தமிழ் தேசத்தின் மீது சிறீலங்கா அரசாங்கத்தினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அழிப்புத் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன், அதிலிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக உடனடியாக இடைக்கால நிர்வாகம் ஒன்று ஏற்படுத்தப்படல் வேண்டும் என்று கோரியதுடன், இந்தியாவிற்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின் இந்தியா 13ஆம் திருத்தச் சட்டத்தினை பற்றி எதிர்காலத்தில் பேசக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

அங்கு கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இன அழிப்பு செயற்பாடுகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் அதற்கான தீர்வு என்ன என்பது பற்றி எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் சிவில் சமூகம் ஆகிய தரப்புக்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தில் எந்தப் பயனும் இல்லை என்பதனை சுட்டிக்காட்டியதுடன், இடைக்கால நிர்வாகத்தை கோரியபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய காலசார நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பு துணைத்தூதரக அதிகாரி மகாலிங்கம் தலைமையில் 6.00 மணி தொடக்கம் 7.30 மணி வரை இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சரவணபவன், சுரேஸ்பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.கே சிவஞானம், ஆனந்தசங்கரி, வரதர் அணி சிறீதரன், ஆகியோரும், சிவில் சமூகம் சார்பாக ஆயர் இராயப்புயோசெப், சட்டத்தரணி குருபரன், முன்னாள் வடக்கு மாகாண சபை செயலாளர் ரங்கராஐன் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.