செய்திகள்

விடுதலைப்புலிகளின் வான்படையைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்காவை நாடிய இலங்கை!?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தியா கொடுத்த ராடார்களை மேம்படுத்த அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமானப்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் 2007ஆம் ஆண்டு வான்வழித் தாக்குதலை நடத்தினர்.  அப்போது இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்தவர் ராபர்ட் பிளேக். அப்போது இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே அவருடன் நடத்திய உரையாடல் பற்றி வாஷிங்டனுக்கும் இதர அமெரிக்க தூதரகங்களுக்கும் பிளேக் அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச மார்ச் 30 ஆம் திகதியன்று தூதரை சந்தித்து ஒரு வேண்டுகோளை வைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க இலங்கையின் வான்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அமெரிக்க இராணுவ குழு ஆராய வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இலங்கையிடம் தற்போது இருப்பது இந்தியா அளித்த 2 இரு பரிமாண ராடார்கள்தான். விரைவில் சீனாவிடம் இருந்து முப்பரிமாண ராடார்களை வாங்க இருக்கிறோம் என்றும் கோத்தபாய கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்க அமெரிக்க தூதர், இந்த வேண்டுகோளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் இந்தியாவுடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட வேண்டியது இருக்கும் என்று கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சேவும் இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் 8 ஆண்டுகாலமாக விமானப் படையை வைத்திருக்கின்றனர். அவர்களிடம் குறைந்தபட்சம் 2 விமானங்கள் இருக்கிறன என்பது தெரியவந்துள்ளது.

வவுனியாவில் நிறுவப்பட்டிருக்கும் இந்திய ராடாரில் அவை தெரியவில்லை. வடக்கிலிருந்து இலங்கையின் மேற்குப் பகுதியில் வில்பத்து தேசிய பூங்கா பகுதிக்கு மேலாக சென்று புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இதில் 2 எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட இந்தியாவிடம் இருந்து கடனாகப் பெற்ற ஹெலிகப்டர்கள் பல சேதமடைந்தன என்றும் கோத்தபாய அமெரிக்க தூதரிடம் கூறியுள்ளார். இதனால் இலங்கையின் முழு வான்பாதுகாப்பு கட்டமைப்பையும் அமெரிக்க இராணுவக் குழு ஆராய்ந்து அதனை மேம்படுத்த உதவ வேண்டும்.

குறிப்பாக அமெரிக்காவின் ராடார் தேவை. அதற்கு முன்னதாக முழுமையாக வான்பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் கோத்தபாய கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவதற்கு இலங்கை ஆட்சேபனை தெரிவிக்காது என்றும் இராணுவ அதிகாரிகள் குழுவை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துவிட்டால் இலங்கை அரசானது இந்தியாவுக்கு இதுபற்றி தெரிவிக்கும் என்றும் கோத்தபாய உறுதியளித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்க கொழும்பு தூதரகம் பரிந்துரை செய்கிறது. இலங்கைக்கு கடற்பரப்பு கண்காணிப்புக்காக அமெரிக்கா ஏற்கெனவே கொடுத்த ராடார்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்றும் கோத்தபாய கூறியதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *