எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் “உயிராயுதம்”எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவன் கடற்கரும்புலி கப்டன் மணியரசனே ஆகும்.
தான் கூறியதுபோலவே உயிராயுதம் எனும் அந்த வரலாற்று சொல்லுக்கு செயல்வடிவம் கொடுத்து அதிவேக டோறா பீரங்கி கலத்தை தகர்த்து அதனை நிரூபித்துக்காட்டியவன் அவன்.
அவன் கரும்புலியாக படகேறுவதற்கு சில மணித்தியாலங்களிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசறிவியல் கல்லூரி பொறுப்பாளர் அரசண்ணா அவர்கள் இரண்டு கடற்கரும்புலிகளையும் சந்தித்து நேர்காணல் ஒன்றைப் பதிவாக்கியிருந்தார்.அப்போதே உயிராயுதம் எனும் அந்த வரலாற்றுச்சொல்லை மணியரசனின் வாய் உதிர்த்தது.
அரசியற்துறையில் சிறந்த பேச்சாளராக அடையாளங்காணப்பட்டிருந்த அரசண்ணாகூட
வியக்கின்ற வகையில் அந்தச் சின்னவயதில் மணியரசனின் அரசியற்தெளிவு வியக்கவைப்பதாயிருந்தது.
1991 இயக்கத்தில் இணைந்து அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு மேலதிக கடற்பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையண்ணையின் மெய்ப்பாதுகாவலனாக இருந்தவன் கிளாலியில் மக்கள் போக்குவரத்துக்கான கடற்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தான்.
இரண்டு வாரத்திற்கு முன்னர் தாக்குதலுக்கான தயார்நிலைக்காக சென்றவன் .தேசியத் தலைவருடன் அமர்ந்திருந்து உணவருந்தி இறுதிவிடைபெற்று வந்தவன்.29/08/1993
அன்று காலை பருத்தித்துறை கடலில் அதிவேக டோறா பீரங்கி கலத்தை தகர்த்து கூடவே கப்டன் புகழரசனுடன் காவியமானான்.இந்தச்சாதனையை அவன் நிகழ்த்தும்போது அவனுக்கு வயது வெறும் பதினாறேதான்.
சிலநாட்களுக்கு முன்னர் வரதனும், மதனும் கிளாலிக்கடலில் நீரூந்து விசைப்படகை மூழ்கடித்ததற்காய் கிளாலியில் நின்ற சண்டை ரீமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்த கடற்புலிகளின் சுவையூற்று குளிர்பானக்கடையில் ஸ்பெஷல் கிறீம் வழங்கப்பட்டிருந்தது.அதன்போது அந்தக்கடையின் மேலாளர் கடற்புலி முத்து அண்ணையிடம் மணியரசன் கூறியது “முத்தண்ணை கொஞ்ச நாளில் திரும்பவும் பெடியள் வருவாங்கள் கிறீம் குடிக்க உங்களுக்கு நட்டம்தான் தயார்பண்ணி வையுங்கோ ஆனால் நான் வரமாட்டேன்”என்று அப்ப சிரிச்ச முத்தண்ணை அவன்ர வீரச்சாவில் படத்திற்கு மாலையிட்ட பின்னர் தேம்பித்தேம்பி அழுதார்.
பின்னாளில் கடற்சண்டைகளின்போது டோறாக்கலத்தை அடையாளப்படுத்தும் கோட்வேட் (பரிபாசைச்சொல்)ஆக மணியரசன் எனும் அவனது பெயரை எமது வாய்கள் உச்சரிக்கத் தொடங்கியது.
சிறப்புத்தளபதி சூசையண்ணை தனது மகனுக்கு அவனது பெயரையே சூட்டியிருந்தார்.
அதேபோல் கப்டன் புகழரசனும் கடற்கரும்புலிகள் படையணியின் நாமத்தைச் சுமந்த வரலாற்றில் தனது பெயரையும் பதித்து பின்னாளில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகள் படையணிக்கு “புகழரசன் படையணி” என தேசியத் தலைவரால் பெயர் சூட்டப்பட்டு இடம்பிடித்துக்கொண்டான்.
இவர்களின் வீரம்செறிந்த வரலாற்றை தமிழினம் நினைவுபடுத்திக்கொண்டே அதன் இலக்கு நோக்கிப் பயணிக்கும்.