Search

கொழும்பு நாடாளுமன்றத்தில் ‘கொல வெறி’! – ஜூனியர் விகடன்

‘கொலவெறி’ சாமான்யமாகத் தணியாது போல!

விசித்திரத்தைப் போற்​றும் இணையத் தலைமுறை, ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடலைக் கொண்டாடுகிறது. ஆனால் ‘தமிழ் தலை​முறைக்கு இந்தப் பாடல் ஓர் இழுக்குச் சின்னமே.!” என்று  தமிழ் ஆர்வலர்கள் பொங்குகிறார்கள். இவர்களது கோபத்துக்கு எண்ணெய் வார்ப்பது மாதிரியான விமர்சனம் இலங்கை நாடாளுமன்றத்தில் விழுந்துள்ளது. ‘தமிழகத் தமிழர்களை கொலைவெறி பிடித்தவர்கள்’ என்று, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்ற சிங்களத் தரப்பு கேலியும் கிண்டலும் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஜனவரி 18-ம் தேதி இலங்கை நாடாளுமன்​றத்தில் ஊழியர் சகாய நிதியம் திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடந்தது. ராஜபக்ஷே கட்சி எம்.பி-யான ஏ.எச்.எம்.அஸ்வர், ”இலங்கையில் ஜே.வி.பி-யினர் கொலை வெறியுடன் திரிகின்றனர். கொலை வெறியுடன் யாழ்ப்பாணம் சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்பி வந்துள் ளனர்” என்று பேசியவர், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் எம்.பி-யான சுனில் ஹந்து நெத்தியைப் பார்த்து ‘ஒய் திஸ் கொல வெறி’ என்று கேட்டார். அதற்கு சுனில், ‘நோ கொல வெறி, நோ கொல வெறி’ என்று சொல்ல, நாடாளுமன்றத்தில் பலத்த சிரிப்பொலி.

தொடர்ந்த ஏ.எச்.எம்.அஸ்வர், ”தமிழ்நாட்டுக்காரர்​களுக்குத்தான் கொலைவெறி பிடித்துள்ளது.அதனால்தான் அவர்கள் கொலை வெறி… கொலை வெறி என்று பாடுகின்றனர். அந்தக் கொலை வெறிப் பாடலுக்கு இங்கே யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் பதிலடி கொடுத்துப் பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்” என்று சொல்ல அவையில் பலத்த வரவேற்பு.

அஸ்வரின் உரைக்குப் பின் பேசினார் ஐக்கியத் தேசியக் கட்சியின் யோகராஜன். ”ஒய் திஸ் கொலைவெறி பாடலை சரியாகப் புரிந்துகொள்ளாத அஸ்வர் தவறான அர்த்தத்தைக் கூறி கொலைவெறியைத் தூண்டும் அர்த்தத்தைப் புகட்டுகிறார். அந்தப் பாடலுக்கு பல்வேறு அர்த்தங்கள் இருந்தாலும், தமிழர்களுக்கு உள்ள கொலை வெறியில்தான் பாடல் பாடப்பட்டதாக அஸ்வர் கூறுகிறார். இது தவறு” என்று மறுத்தார். அப்போது அஸ்வர் குறுக்கிட்டு, ”இல்லை, இல்லை. அது சரியான அர்த்தமே. எம் மீது உள்ள கொலை வெறியில்தான் எம்மைப் பார்த்து இப்பாடலைப் பாடியுள்ளனர்” என்றார் விடாப்பிடியாக. மீண்டும் மறுத்த யோகராஜன், ”தமிழர்களுக்கு உள்ள கொலை வெறியில்தான் இப்பாடல் பாடப்​பட்டதாக நீங்கள் மட்டுமே கூறிக் கொண்டு, இங்கு உள்ளவர்களுக்கு கொலை வெறியைத் தூண்டத் துடிக்கிறீர்கள். இது தவறான நிலைப்பாடு. தயவு செய்து அந்தப் பாட லுக்குத் தவறான அர்த்தத்தைப் புகட்ட வேண்டாம்” என்றார்.

தனுஷ் புகழ் பரவுகிறதோ இல்லையோ… தமிழுக்கு இழுக்குதான் சேர்கிறது!

– மகா.தமிழ்ப் பிரபாகரன்

நன்றி : ஜூனியர் விகடன் 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *