வல்வை புளுஸ் பொன் விழா மலரில் இருந்து பொட்டுக்கட்டி அப்பா பற்றி சில பகுதிகள்…

வல்வை புளுஸ் பொன் விழா மலரில் இருந்து பொட்டுக்கட்டி அப்பா பற்றி சில பகுதிகள்…
எங்கள் வல்வை மண்ணினதும், வல்வை புளுஸ் கழகத்தினதும் முகவரி ஒன்று
க. தேவசிகாமணி (பொட்டு கட்டி அண்ணா)
வல்வை மண்ணில் சுமார் 28 வருடங்கள் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் என்று புளுஸ் விளையாட்டு கழகத்திற்காக 1000 போட்டிகளுக்கு மேல் விளையாடி பெருமை சேர்த்த கட்டி அண்ணாவைப் பற்றித் தனிப் புத்தகம் எழுதும் அளவிற்கு விடயங்கள் உண்டு. அவற்றில் இருந்து சில துளிகள் இங்கே.

யாழ் குடாநாட்டின் விளையாட்டு வீரர்களில் சிலருடைய பெயர்களைச் சொன்னால் அதிகமாக எல்லோருக்குமே தெரியும் என்று கூறுவார்கள். இன்றும் புலம் பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் விளையாட்டுத் துறையோடு தொடர்புடைய அனைவரும் அறிந்த ஒருவராகப் பவனி வருபவர் வல்வை பு@ஸ் விளையாட்டுக்கழக வீரர் பொட்டுக்கட்டி அண்ணாவாகும். இவரது இயற்பெயர் தேவசிகாமணி. இவர் சிறுவயது முதலே அவர் வீட்டுக்கு அருகாமையிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன், வல்வை முத்துமாரி அம்மன் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து கொண்டு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டுதான் பாடசாலை செல்வது வழக்கம். அது போல் அவர் வேறு எங்கு செல்வதானாலும் பொட்டுடனே செல்வதால் கட்டி என்னும் அவருடைய செல்லப் பெயருடன் பொட்டும் சேர்ந்து பொட்டுக் கட்டி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் சிதம்பராக் கல்லூரியில் படிக்கும் காலங்களில் படிப்பிலுள்ள திறமை போல விளையாட்டிலும் தனது திறமையைக் காட்டி வந்துள்ளார். இவர் உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டம், செற்றப், ஓவகேம், இரண்டிலும் கிறிக்கற், பற்வின்ரன், நீச்சல் மெய்வல்லுனர் போட்டிகளில், குண்டெறிதல், பரிதிவட்டம் எறிதல், ஈட்டி எறிதல், நீளம் பாய்தல், ஓட்டம் என்பவற்றில் முத்திரை பதித்தவராவர். 1965ம் ஆண்டு வல்வை சன சமூகசேவா நிலையத்தால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தலில் 20 அடி பாய்ந்ததுடன் குண்டெறிதல் 38 அடி 9 அங்குலம் எறிந்து திரு.துரைலிங்கம் அவர்களின் சாதனையை முறியடித்து வல்வெட்டித்துறையின் சாதனையாளராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார். பாடசாலைக்கான உதைபந்தாட்டத்தில் 3 லெவன், 2லெவன், 1லெவன் என எல்லாப்பிரிவுகளிலும் விளையாடி உள்ளார். அது போலவே கைப்பந்தாட்டத்திலும் 17 வயதிற்குட்பட்டவர் பிரிவிலும் 19 வயதிற்குட்பட்டவர் பிரிவிலும் விளையாடி உள்ளார்.
சிதம்பராக் கல்லூரி வடமராட்சிச் சம்பியனாக வந்த காரணத்தால் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான கைப்பந்தாட்டப் போட்டியில் பங்கு பெறும் தகமையைப் பெற்றது. இதன் மூலம் சிதம்பராக் கல்லூரி கொழும்பு சென்று விளையாடிய போதும் கட்டி தனது திறமையை வெளிப்படுத்தத் தவறவில்லை. இதனால் 19 வயதுக்குட்பட்டவர்கள் தேசிய அணியில் விளையாட கொழும்பில் பயிற்சிக்கு வரும்படி சிதம்பராக்கல்லூரிக்கு கடித மூலம் அறிவித்தல் அனுப்பியிருந்தது. பயிற்சியாளர் திரு. தியாகராசா அவர்கள் தேவசிகாமணியிடம் அந்தக் கடிதத்தைக் காட்டி கொழும்புக்கு பயிற்சிக்கு அனுப்பி செலவு செய்யும் அளவுக்கு பாடசாலையில் வசதியில்லை. நீ விரும்பினால் கடிதத்துடன் நேரடியாகச் செல்லவும் என்று கூறிவிட்டார். கட்டி அண்ணரின் குடும்பத்தினரிடமும் வசதியில்லாததனால் கொழும்பு செல்லவில்லை. பயிற்சியில் பங்கு பற்றாததனால் வெளிநாடு செல்லும் கட்டி அண்ணாவின் கனவு தகர்ந்தது. இன்றுவரை கட்டி அண்ணாவுக்கு இது மனச் சுமைதான்.
கரப்பந்தாட்டத்தை (செற்ரப்) பொறுத்தவரை வல்வை பு@ஸ் ஆரம்பித்த 1961 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 20 வருட காலம் வல்வை புளுஸ் பொற்காலம் ஆகும். இக்காலப் பகுதியில் லாலா சோப், ஈழநாடு, காணிவேல்களில் நடக்கும் சுற்றுப் போட்டி என்று யாழ் மாவட்டத்தில் நடந்த அனைத்துப் பாரிய சுற்றுப் போட்டிகளிலும் வல்வை பு@ஸ் பெற்ற வெற்றிகளும், அப்போட்டிகளில் அனைத்திலும் விளையாடிய கட்டி அண்ணாவின் விளையாட்டுத் திறமையும், யாராலும் மறக்க முடியாதவையாகும். ஈழநாடு பத்திரிகையின் 10ஆவது ஆண்டு சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற 7 அடி உயரமான வெற்றிக்கேடயத்தை லொறியில் எடுத்து வந்து சந்தி வாசிகசாலையின் கிழக்கு பக்க வாசலில் பார்வைக்கு வைத்திருந்தது, அன்று வல்வையில் வாழ்ந்த அனைவருக்கும் இன்றும் ஞாபகம் இருக்கும்.

1962 ஆண்டு பருத்திதுறை மாவட்டக் கைப்பந்தாட்ட கோஷ்டி மாவட்டங்களுக்கான கைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு சென்று விளையாடிய போது வல்வை புளுஸ் வி. கழத்தைச் சேர்ந்த திரு. என்.குகதாஸ், திரு. ஏ.எஸ். அருட்பிரகாசம், திரு.தேவசிகாமணி (கட்டி அண்ணா) ஆகிய மூவரும் பருத்தித்துறை மாவட்டக் கைப்பந்தாட்டக் கோஷ்டிக்காக விளையாடினார்கள். தொடர்ந்து பருத்தித்துறை மாவட்டக் கைப்பந்தாட்ட அணிக்காக பல வருடங்கள் விளையாடினார். யாழ் மாவட்ட அணியில் விளையாட்டு வீரனாகத் தெரிவு செய்யப்பட்டு பின்பு யாழ் மாவட்டத்திற்கு கப்டனாக நீண்ட காலம் விளையாடினார். பின்நாளில் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டு கடமையாற்றியமை வல்வைக்கு பெருமை தரும் விடயமாகும்.

கட்டி அண்ணா உதைபந்தாட்டத்தில் இரு கால்களாலும் சமனாக விளையாடும் திறமை பெற்றிருந்ததுடன், எல்லா நிலைக்களத்திலும் விளையாடும் தகமை பெற்றிருந்தார். 1962ம் ஆண்டு சிதம்பராக் கல்லூரிக்காக விளையாடிய போது சிதம்பராக் கல்லூரி சாம்பியனாக வந்தது. இவரின் திறமையைப் பாராட்டி 1962ம் ஆண்டு பாடசாலையால் வழங்கப்படும் உயரிய விருதான கொலிஜ்கலர் (College Colour ) உதைபந்தாட்டத்திற்கும் கைப்பந்தாட்டத்திற்கும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

பருத்தித்துறை மாவட்ட உதைபந்தாட்டக் கோஷ்டி சீனத் தேசிய உதைபந்தாட்டக் கோஷ்டியுடன் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாடிய போது கட்டி அண்ணா பரு.மாவட்ட உதைபந்தாட்ட கப்டனாக விளையாடினார். அந்தப் போட்டியில் வல்வை பு@சைச் சேர்ந்த தங்கவடிவேல், செல்வச்சந்திரன், தங்கவேல், குணநாதன், சுந்தரகுமார் ஆகியோரும் விளையாடினர். கட்டியண்ணா தொடர்ந்து பலவருடங்கள் பரு. மாவட்ட உதைபந்தாட்ட குழுவுக்காக விளையாடினார்.

கட்டி அண்ணா மூன்று முறை யாழ் மாவட்ட உதைபந்தாட்ட கோஷ்டி தெரிவுக்காகிய பயிற்சிக்குச் சென்று மூன்று முறையும் யாழ் மாவட்ட உதைபந்தாட்ட வீரராகத் தெரிவு செய்யப்பட்டார். முதல் முறை கட்டி அண்ணா மட்டும் பயிற்சிக்குச் சென்று தெரிவு செய்யப்பட்டார். இரண்டாம் முறை கட்டி அண்ணாவும் தங்கவடிவேலும் சென்று இருவரும் தெரிவு செய்யப்பட்டார்கள். மூன்றாம் முறை 80ம் ஆண்டு யாழ் மாவட்ட பயிற்சிக்குச் சென்ற கட்டியண்ணா, ரமேஸ், வேலாயுதம்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகிய நால்வரும் யாழ் மாவட்டக் கோஷ்டிக்குத் தெரிவு செய்யப்பட்டனர். கட்டியண்ணா வலது பக்க வெளிக்கள (றைட் அவுட்) முன்னணி வீரராக விளையாடினார். 1943ம் ஆண்டு பிறந்த கட்டியண்ணாவுக்கு 80ம் ஆண்டு யாழ் மாவட்ட உதைபந்தாட்டக் கோஷ்டி விளையாடிய போது வயது 37. ஒரே நேரத்தில் யாழ் மாவட்ட உதைபந்தாட்டக் கோஷ்டிக்கு வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திலிருந்து நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

போட்டு கட்டி அண்ணா வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்காக 28 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து விளையாடி வந்ததால் பு@ஸ் விளையாட்டுக் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டி, குருநாகல் உதைபந்தாட்டச் சுற்றுலா, திருகோணமலை உதைபந்தாட்டச் சுற்றுலா, வவுனியா உதைபந்தாட்டச் சுற்றுலா, திருகோணமலை கைப்பந்தாட்டச் சுற்றுலா, வவுனியா கைப்பந்தாட்டச் சுற்றுலா என எல்லாச் சுற்றுலாக்களிலும் பங்கு பற்றி உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மாவட்டங்களில் உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளார். அது மட்டுமன்றி, இந்தியாவில் பாண்டிச்சேரியில் சுதந்திர தின விழாவின் போது பு@ஸ் என்ற பெயரில் கட்டியண்ணா, அருணாசலண்ணா, தங்கவேல், ஜெயபாலசிங்கம் ஆகியோர் கைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றினர்.
சிதம்பராக் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டிகளில் நீல இல்ல கப்டனாக 1962,63ம் ஆண்டுகளில் இருந்தார். 20 வருடங்கள் சம்பியனாக வர முடியாத நீல இல்லம் கட்டி அண்ணா கப்டனாக இருந்த 62லும் 63லும் இரண்டு வருடமும் சம்பியனாக வந்தது அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.
வல்வை தெணியம்பையில் நடைபெற்ற பற்மின்ரன் (பூப்பந்தாட்டம்) இரட்டையர் பிரிவுப் போட்டியில் கட்டியண்ணா, அருணாசலண்ணா ஜோடி சம்பியன் பட்டம் பெற்றது. யாழ் சுண்டுக்குளி மகளிர் பாடசாலையில் லுஆஊயு யால் நடத்தப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பற்வின்ரன் போட்டியில் புளுஸ் என்ற பெயரில் விளையாடி கட்டியண்ணா, அருணாசலண்ணா ஜோடி இரண்டாம் இடம்பெற்றனர். கட்டியண்ணா நீச்சல் போட்டிகளிலும் பங்கு பற்றி பல பரிசுகள் பெற்றவர்.

கட்டியண்ணா பல உதைபந்தாட்டப் போட்டிகளில், கைபந்தாட்டப் போட்டிகளில் சிறந்த வீரருக்கான பரிசைப் பெற்றிருக்கின்றார் இருந்த போதும் , சிதம்பராக்கல்லூரியில் படித்த போது கல்லூரியால் வழங்கப்பட்ட கைப்பந்தாட்ட, உதைபந்தாட்டக் கலர்கள் (College Colour ) வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக வெள்ளி விழா ஆண்டின் போது வல்வையின் சிறந்த விளையாட்டு வீரனுக்காகிய விருது, கனடாவில் வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கக் கிளை 30.12.2006ல் குளிர்கால ஒன்று கூடலில் கட்டியண்ணாவுக்கு அளித்த விருதை அவர் மகள் பானு கனடாவில் பெற்றுக்கொண்டார். வல்வை மக்களால் வழங்கப்பட்ட மூன்று விருதுகளையுமே தனது வாழ்நாள் சிறந்த விருதுகளாக இன்றும் கூறிக் கொண்டிருக்கின்றார். ஆயிரம் போட்டிகளுக்கு மேல் வல்வை புளு ஸிற்காக விளையாடி புளுஸ்சுக்கும் வல்வைக்கும் பெருமை சேர்த்து தந்தவர் இந்தப் பொட்டுக் கட்டியண்ணாவாகும்.

கட்டி அண்ணாவை வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகத்தின் ஒரு பெரும் சகாப்தம் என்றே கூறலாம். மிகச் சிறந்த விளையாட்டு வீரரான இவர் புதிய வீரர்களை ஊக்கப்படுத்துவதிலும், தனக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதிலும், வல்வைக்கு வெளியே தெரிவு அணிகளில் எமது பு@ஸ் வீரர்களைக் கொண்டு போய் சேர்ப்பதிலும் அதி உச்சமான ஆர்வம் காட்டியவர். அவர் தனது திறமையை வளர்ப்பதில் காட்டிய அக்கறையை விடவும் அதிகமான அக்கறையையும், கவனத்தையும் புதிய வீரர்களின் திறமைகளை ஒருங்கிணைப்பதிலும் காட்டியவர். இன்றளவும் அவர் அதிகமான வல்வை புளுஸ் வீரர்களின் விருப்பத்துக்குரியவராகவும், மரியாதைக்குரியவராகவும் இருப்பதற்கு அவரின் இத்தகைய இயபுல்களே காரணம். அவர் என்றும் எங்களின் மரியாதைக்குரியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *