கோவை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து வருகிறார். அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது, அதனால் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன் கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார். அவருக்குப் போகும் இடமெல்லாம் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கொடும்பாவி தமிழகத்தில் முதல்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல்முறையாக எரிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.