இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை 20 சதவீதத்தில் குறைக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி யோசனை முன்வத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதை வலியுறுத்தியே இந்த யோசனையை அவர் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாம் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கும் வழமையான வாழ்வுக்கு திரும்பவும் மீள் கட்டுமானதத்தில் உதவவும் பெரிதும் முயற்சி செய்தோம். ஆனால் நாம் ஆதரவளிக்க முயன்ற பல திட்டங்களில் அரசாங்கம் குறிப்பாக இராணுவம் தலையீடு செய்தது. எனவே எம்மால் அந்த திட்டங்களை தொடர முடியவில்லை” என ஒரு சிரேஸ்ட இராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார்.
“இலங்கை நடுத்தர வருமானமுள்ள ஒரு நாடு. இங்கு எமக்கு திட்டமிடுதலிலும் கஷ்டங்கள் உள்ளன. எனவே தனது சொந்த மூலவளங்களை கொண்ட நாடான இங்குதான் நாம் உதவியை குறைக்க வேண்டும்” என தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் தெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே இலங்கை அரசு உள்நாட்டு விவகாரங்களில் அக்கறை செலுத்தும் என தமிழக அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தபோதும் பொருளாதாரத் தடை குறித்த யோசனை இல்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.