உலக நாடுகளை மதிக்காமல் ஒரு ‘பொறுக்கி நாடாகச்’ செயல்படும் இலங்கையின் இனவெறிப் போக்கை, உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் காலை 10 மதியளவில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமைப் பேரணியைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. வீரவணக்கம்
தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்புக்கான களத்திலும், ஈழத்தில் இன விடுதலைக்கான களத்திலும் தம் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அத்துடன், மகளிருக்குரிய சமத்துவத்துக்கான போராட்டங்களில் பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களுக்கும் தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
2. இனப்படுகொலைக்கு நீதி வழங்குக
ஈழத்தில் இனப்படுகொலை செய்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த கொடுங்கோலன் இராசபக்சேவின் தலைமையிலான கொலைக் கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்னும் குரல் உலக அளவில் வலுவடைந்து வருகிறது.
அதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிங்கள இனவெறி அரசுக்கெதிராக அமெரிக்க வல்லரசால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையெனினும் இலங்கைப் பேரினவாத அரசின் போர்க் குற்றங்களை அது சுட்டிக்காட்டியுள்ளது.
இனப்படுகொலைக் குற்றவாளிகள் ‘சுதந்திரமான சர்வதேச விசாரணை’க்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அரசையும் உலக நாடுகளையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
3. ஈழமே தீர்வு
சிங்களவர்களைவிட தொன்மைவாய்ந்த இனமாக இலங்கையில் வாழ்ந்து வருவது தமிழினம்தான். ‘தாம் பூர்வகுடிகளல்ல, வந்தேறிகள்தாம்’ என்பதை இலங்கைத் தூதரே அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி தொன்மைக் காலந்தொட்டு ஆட்சியதிகாரம் செய்த தமிழினம் இப்போது சிறுபான்மை இனமாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது. ஆங்கிலேயே காலனிய ஆட்சியாளர்கள் இலங்கைக்கு விடுதலை வழங்கியபோது ஆட்சியதிகாரத்தை சிங்களவர்களின் கைகளில் கொடுத்துவிட்டுப் போனதால்தான் தமிழ் மக்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆனார்கள். சிங்களப் பேரினவாதம், இனச் சிறுபான்மையினரை மட்டுமல்ல, மதச் சிறுபான்மையினரையும் ஒடுக்கி வருகிறது. இந்நிலையில், தமிழ் மக்கள் சமத்துவத்தோடும் அமைதியோடும் வாழ தனி ஈழமே ஒரே தீர்வு என்பதை ஈழத் தமிழர் உள்ளிட்ட அனைத்து உலகத் தமிழர்களும் வற்புறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை நிறைவேற்ற ஐ.நா. பேரவையின் மேற்பார்வையில் ஈழத் தமிழர்களிடையே ‘கருத்தறியும் வாக்கெடுப்பு’ நடத்தப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது
54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. அங்கு மாநாடு நடைபெற்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையே அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும். போர்க்குற்றம் இழைத்த நாடாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கண்டனத்துக்குள்ளாகியிருக்கும் இலங்கைக்கு அத்தகைய அங்கீகாரத்தை வழங்கக் கூடாது; அது காமன்வெல்த் கூட்டமைப்பின் கொள்கைக்கும் எதிரானது என ஏற்கனவே ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
எனவே, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாமல் தடுக்க இந்திய அரசும் குரலெழுப்ப வேண்டுமென வலியுறுத்துகிறோம். எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் நாள் இலண்டனில் நடைபெறவுள்ள காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் இலங்கையை ‘காமன்வெல்த் உறுப்புத் தகுதி’யிலிருந்து நீக்கம் செய்ய வேண்டுமெனவும், அதற்காக இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
5. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது
கடந்த மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஓர் ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 24வது அமர்வில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் வாய்மொழியாக அறிக்கை வழங்குவதென்றும், அடுத்து 2014 மார்ச்சில் நடைபெறவுள்ள 25வது அமர்வில் மீண்டும் இலங்கை குறித்து விவாதிப்பதெனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லை. அது கூறியுள்ளவாறு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க மாட்டோம்! என இலங்கை அரசு அண்மையில் அறிவித்துள்ளது. எனவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஓர் ஆண்டு காலம் வரை காத்திருக்கத் தேவையில்லை. உலக நாடுகளை மதிக்காமல் ஒரு ‘பொறுக்கி நாடாகச்’ செயல்படும் இலங்கையின் இனவெறிப் போக்கை, உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இப்பிரச்சனையின் அவசர முக்கியத்துவம் கருதி மே மாதத்தில் நடைபெறவுள்ள 23ஆவது கூட்டத்திலேயே இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவை விவாணிக்க வேண்டுமெனவும் அதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
6. சாதிய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துக
தமிழ்நாட்டில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிய வன்கொடுமைகள் அண்மைக் காலமாக பெருகியுள்ளன. விழுப்புரம், தருமபுரி மாவட்டங்கள்தாம் இதில் முன்னணியில் இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளிலும், தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்குகளிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நீதிமன்றம் தலையிட்டு ஆணையிட்ட தருமபுரி வழக்கைத் தவிர, வேறு எங்கும் சட்டப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. உரிய இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் இத்தகைய தலித் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகளின் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு சட்டரீதியான தனது கடமைகளை ஆற்றிட வேண்டுமெனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
7. வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்துக
தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு சாதி வெறியர்கள்களின் வெறுப்புப் பிரச்சாரமே தூண்டுகோலாக உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அவர்களை மேலும் ஊக்குவிப்பதுபோல அரசு செயல்படுவதால்தான் இத்தகைய வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அரசியல் ஆதாயம் கருதி, திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டும் வகையில் செயல்பட்டுவரும் சாதிவெறியர்களின் தலித் மக்களுக்கு எதிரான ‘வெறுப்புப் பிரச்சாரத்தை’த் தடுக்க வேண்டுமெனவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
8. கௌரவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றுக
சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்வோரைப் படுகொலை செய்யும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கௌரவக் கொலைகள் என ஊடகங்களால் குறிப்பிடப்படும் இந்தப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென இந்திய சட்ட ஆணையமும், நீதிபதி வர்மா குழுவும் இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளன. ஆனால் அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இந்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. கௌரவக் கொலைகளைத் தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்திலும் குரலெழுப்பியுள்ளது. இனியும் காலந்தாழ்த்தாமல் கௌரவக் கொலைகளைத் தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்றிடுமாறு இந்திய, தமிழக அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
9. தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்துக
அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற்றுவரும் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை பெறும் தகுதியிருந்தும் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதியுறுகின்றனர். தனியார்மயமே அரசின் கொள்கையாகிவிட்ட சூழலில், இடஒதுக்கீட்டு உரிமையைத் தனியார் துறைக்கும் விரிவுபடுத்தினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட-பழங்குடியின இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியும். பொது வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் தனியார் துறையினர் சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல.
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிவகைகளைக் கண்டறிய 2004ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கென சட்ட மசோதா ஒன்றும் தயாரிக்கப்பட்டது. ஆனால், அவை யாவும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தவீயார் துறையிலும் இடஒதுக்கீட்டு உரிமையை விரிவுபடுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
10. தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் துணைத் திட்ட பாதுகாப்புச் சட்டம் இயற்றுக
நிதிநிலை அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் மாநிலத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகைக்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என திருமதி இந்திராகாந்தி அவர்கள் ஆட்சியின்போது, ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இந்திய அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால் அது கடந்த முப்பது ஆண்டுகளாக மாநில அரசுகளால் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இதற்காக சட்டம் ஒன்றை இயற்றுமாறு திருமதி சோனியாகாந்தி அவர்களின் தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தற்போது அத்தகைய சட்டத்தை இந்தியாவிலேயே முதன்முதலாக இயற்றியுள்ள ஆந்திர மாநில அரசையும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சாரப் பாராட்டுகிறது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும் நிணியை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தாமல் தடுக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. ஆந்திர அரசைப் பின்பற்றி அத்தகைய சட்டம் ஒன்றை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
11. மதவாத சக்திகளை முறியடிப்போம்
இந்தியாவைப் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை விடுதலைச் சிறுத்தைகள் கண்டிக்கிறோம். ஈழத் தமிழரின் இன்னல் தொடரவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படவும் காரணமாக உள்ள இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம். ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு காட்டிவரும் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அண்மையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியது.
காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதென்பது பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணமாகிவிடக் கூடாது. இந்தியாவில் மதவெறியைத் தூண்டி பல்லாயிரக் கணக்கான உழைக்கும் மக்கள் படுகொலை செய்யப்படக் காரணம் பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள்தாம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. குஜராத்தில் ஆயிரக் கணக்கான இசுலாமியர்களின் இனப்படுகொலை நடப்பதற்குக் காரணமான நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்தும் வேளையில், மதவாத சக்திகள் குறித்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளை எதிர்க்கும் அதே வேளையில், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுத்திட, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
12. ஒற்றுமை காக்க உறுதியேற்போம்
முன் எப்போதையும்விட அண்மைக்காலமாக இந்திய அரசால் தமிழக உரிமைகள் மென்மேலும் மறுக்கப்படும் நிலையைப் பார்க்கிறோம். தமிழக மீனவர்கள் நாள்தோறும் சிங்களப் படையால் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் மத்தியில் குவிக்கப்படுகின்றன. ஈழத் தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கத் தமிழகம் குரல் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் தமிழக மக்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டியது இன்றியமையாததாகும். இந்நிலையில் சாதி, மதப் பகைமைகளை மூட்டி தமிழக மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய பிற்போக்கான சாதியவாத சக்திகளைத் தனிமைப்படுத்தவும், தமிழக மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.