ஒரே நம்பிக்கை, ஜெயலலிதாதான்! பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டி

ஒரே நம்பிக்கை, ஜெயலலிதாதான்! பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டி

‘தேவிந்தர் சிங் புல்லரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்ய முடியாது’ என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்​ப​ளித்ததும் பதறிப் போனது பஞ்சாப் மட்டுமா… தமிழகமும்தான். காரணம், தூக்குக் கொட்டடியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன்.

இவர்கள் மூவரும் தங்களின் தூக்குத் தண்டனை​யை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவும், புல்லர் தனது தூக்குத் தண்டனையை ரத்துசெய்யக் கோரி தாக்கல்செய்த மனுவும் ஏறத்தாழ ஒன்றுதான். புல்லருக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு… பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தப் பதற்ற​மானச் சூழ்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளைச் சந்தித்தோம்.

கே:  புல்லருக்கு தூக்குத் தண்டனையை ரத்துசெய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே?

ப:  புல்லருக்குத் தூக்குத் தண்டனையை ரத்து​செய்ய முடியாது என்பதற்கு உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்துக்கள் என் மகன் வழக்குக்குப் பொருந்தாது என்கின்றனர் வழக்கறிஞர்கள். ஜனாதிபதி செய்த காலதாமதத்தைக் காரணம் காட்டி, தடா போன்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் கைதாகி மரண தண்டனை பெற்றுள்ள கைதிகளின் தண்டனையை குறைக்க முடியாது என்று, புல்லர் வழக்கில் தீர்ப்பளித்​துள்ளது உச்ச நீதிமன்றம். பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘இவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், பயங்கரவாதக் குற்றமோ, பயங்கரவாத மிரட்டல் குற்றமோ அல்ல. தனி மனிதப் படுகொலைக்கான குற்றம்தான். எனவே, இவர்களைத் தடாவில் கைதுசெய்தது செல்லாது’ என்று குறிப்பிட்டது. இவர்கள் மூவருக்கும் தூக்குத் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக இவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்​டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக மூன்று உயிர்கள் பறிக்கப்படுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி என் மகன் குற்றமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு அவன் சிறையில் கழித்த ஒவ்வொரு நாளும் இப்போது சாட்சியாகி நிற்கிறது. அவன் எழுதிய ‘தூக்குக் கொட்டடியில் இருந்து முறையீட்டு மடல்’ என்ற புத்தகத்தில், நடந்தவை அனைத்தையும் தெளிவாக விவரித்துள்ளான். அதில் அவன் முன்​வைத்துள்ள வாதங்களை, அவன் கூறியுள்ள உண்மைகளின் ஒரு வரியைக்கூட இதுவரை யாராலும் மறுக்கவோ, கேள்விக்கு உட்படுத்தவோ முடியவில்லை. அவன் நிரபராதி. அவனுக்கு சட்டம் விடுதலைதான் வழங்கும்; மரண தண்டனை வழங்காது என்று நம்புகிறேன்.

கே: புல்லரின் தீர்ப்புக்குப் பிறகு, நீங்கள் பேரறிவாளனுடன் பேசினீர்களா?

ப: நான் பேசவில்லை. வழக்கறிஞர் பேசிவிட்டு எனக்குத் தகவல் தெரிவித்தார். ‘பேரறிவாளன் உள்ளிட்ட மூவருமே மிகவும் தைரியமாகத்தான் உள்ள​னர்; புல்லர் வழக்கின் தீர்ப்பு, அவர்களை எந்தவிதத்திலும் சலனப்படுத்தவில்லை’ என்று அவர் சொன்னார்.

கே: உங்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்னவாக இருக்கிறது?

ப: எங்களின் ஒரே நம்பிக்கை, தமிழக முதல​மைச்சர் ஜெயலலிதாதான். அவரைச் சந்தித்து முறையிடுவதுதான் எங்களின் அடுத்தக் கட்ட முயற்சி. சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு​வந்து மூவரின் தூக்குத் தண்டனையை ஒத்திப்போடவைத்த அவரால்தான், அவர்களை இந்தத் தண்டனையில் இருந்து முழுமையாக மீட்டுத்தரவும் முடியும். இதற்காக அவர் அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் இயற்றி அந்த மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றித்தர கேட்கப்போகிறேன். இதற்காக அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளேன். இந்த வாரத்துக்குள் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

புல்லர் யார்?

சண்டிகர் பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றிவர் தேவிந்தர் சிங் புல்லர். 1991-ம் ஆண்டு, வழக்கு விசாரணை ஒன்றுக்காக புல்லரின் வீட்டுக்கு சண்டிகர் போலீஸ் சென்றது. அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. விசாரணைக்குச் சென்ற போலீஸாரைத் தாக்கியதாக புல்லரின் மீது சண்டிகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. புல்லர் தலைமறைவாகிவிட, அவருடைய அப்பாவையும், உறவினர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலே இல்லை. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த புல்லர் மீது, கடந்த 1993-ம் ஆண்டு நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கும் சேர்க்கப்பட்டது. அதையடுத்து, ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற புல்லர், அங்கு அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்தார். அடைக்கலம் தராத ஜெர்மனி, கடந்த 1995-ம் ஆண்டு புல்லரை இந்தியாவிடம் ஒப்படைத்தது. அதன்பிறகு, இந்தப் பிரச்னையில் தீர்ப்பளித்த ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நீதிமன்றம், ‘புல்லரை இந்தியாவிடம் ஒப்படைத்தது தவறு’ என்று தீர்ப்பளித்தது. அதற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட புல்லருக்கு டெல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கிவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புல்லர் வழக்குத் தொடுத்தார். அதை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், ‘புல்லர் குற்றவாளியே அல்ல. அவர் குற்றவாளி என்பதற்கு எந்த ஆதாரங்களும் சாட்சிகளும் இல்லை. எனவே, அவரை விடுதலை செய்கிறேன்’ என்று தலைமை நீதிபதி எம்.பி.ஷா தீர்ப்பளித்தார். மற்ற இரண்டு நீதிபதிகள், புல்லரின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தனர். அவர்களது தீர்ப்பிலும்கூட, புல்லரின் கருணை மனுவை பரிசீலனை செய்யும்போது தலைமை நீதிபதி எம்.பி.ஷாவின் தீர்ப்பை கருத்தில்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர். இதை வலியுறுத்தி சிறைக் கைதிகள் பாதுகாப்பு மையத் தலைவர் புகழேந்தி, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.