Search

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல்

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல்

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைத் தாக்கிய இந்து முன்னணியைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக மத்திய – மாநில குழுக்களின் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று முற்பகல் தொடங்க இருந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி, மத்திய நிபுணர் குழுவினரிடம் மனு அளிப்பதற்காக, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலாஜி, செயலாளர் உடையார் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் சிலர் காரில் வந்தனர். அந்தக் காரை முற்றுகையிட்ட இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்தபோது, கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் போராட்டக்காரர்களை கற்களாலும், செருப்பாலும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அடித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். எனினும், அங்கு ஆக்ரோஷமான மோதல் நீடித்தது.

பின்னர், தங்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி, அணு உலை எதிர்ப்பாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உடையார், நிர்வாகிகள் ஆறுமுகம், மாரியப்பன், முருகானந்தம், மணி உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேநேரத்தில், மற்றொரு வாயில் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்த இந்து தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மதுசூதன பெருமாள், மாவட்ட தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் அணு உலை எதிர்ப்பாளர்களைத் தாக்க முயன்றனர்.

இதையடுத்து, மது சூதன பெருமாள் உள்பட 3 பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடங்குளம் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதால், நெல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *