
இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் சுஜாதா’ என்று போர்க்கப்பலும், ‘ஐஎன்எஸ் தரங்கினி’ என்ற பாய்மரப் பயணப் பயிற்சிக் கப்பலும், இந்தியக் கடலோரக் காவல்படையின் ‘வருண’ என்ற ரோந்துக் கப்பலுமே இவ்வாறு நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்தக் கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்தியக் கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான, ‘ஐஎன்எஸ் சுஜாதா’, 101 .1 மீற்றர் நீளமும் 1890 தொன் எடையும் கொண்டது. இதில் 192 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.
‘ஐஎன்எஸ் தரங்கினி’ என்ற 54 மீற்றர் நீளமும் 420 தொன் எடையும் கொண்ட பாய்மரப் பயணப் பயிற்சிக் கப்பலில் 80 இந்தியக் கடற்படையினர் பணிபுரிகின்றனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் ‘வருண’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் 187 கடலோரக் காவல் படையினர் பணியாற்றுகின்றனர். இதன் நீளம் 74 மீற்றர்களாகும். 1247 தொன் எடை கொண்டது.
சுஜாதா மற்றும் வருண ஆகிய கப்பல்களில் தலா ஒரு ‘செரெக்’ ரக உலங்கு வானூர்திகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
எதிர்வரும் 21ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இந்தியக் கப்பல்கள், இலங்கை கடற்படையினருடன் இணைந்து சிறப்புப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கவுள்ளன.