எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்பத்தில் கொடிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம்!
எகிப்தில் இடம்பெற்ற சூப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட பொறுமைக் குலைவும், கலவரமும் 74 பேருடைய உயிர்களை காவுகொண்டுள்ளது. 1000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். எகிப்திய அரசு மூன்று தினங்கள் அரைக்கம்பத்தில் கொடிகளை பறக்கவிட்டு தேசிய துக்கம் அனுட்டிக்கும்படி கேட்டுள்ளது. இன்று எகிப்திய கபினட் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றமும் இந்த விவகாரத்தை விவாதிக்க அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இந்த உரையாடல்களில் கலந்துகொள்ள எகிப்திய உதைபந்தாட்ட சம்மேளன நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அனைத்து லீக் போட்டிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. இத்தனைபேர் காட்டுமிராண்டிகள் போல மோதி மடிவதை பார்த்துக் கொண்டு நின்ற எகிப்திய இராணுவம் பலத்த விமர்சனங்களை சந்தித்துள்ளது. எகிப்தில் உள்ள போட் செயிட் நகரத்தில் உள்ள ஸ்ரேடியத்தில் கெய்ரோவை சேர்ந்த அல் அலி அணிக்கும் போட் செயிட்டை சேர்ந்த அல் அக்ரம் அணிக்கும் இடையே இந்தப் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
போட் செயிட்டில் உள்ள அல் அக்ரம் அணி 3- 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிப்படியில் இருந்தது. இத்தருணம் 13.000 அல் அக்ரம் ஆதரவாளர் வேகமாக மைதானத்திற்குள் ஓடிப்போனார்கள். காட்டு மிராண்டிகள் தாக்கியதியது போல அல் அலி உதைபந்தாட்ட ஆதரவாளரை தாக்கினார்கள். அந்த இடத்திலேயே அல் அலி பார்வையாளர்கள் கொல்லப்பட்டார்கள், வீரர்கள் மிதிக்கப்பட்டார்கள். ஆனால் இது வெறுமனே உதைபந்தாட்ட மோதல் அல்ல, பழைய கொஸ்னி முபாரக் ஆதரவாளரின் திட்டமிட்ட செயல் என்று கூறப்படுகிறது. அல் அலி அணி கடந்த 2011 எகிப்திய புரட்சியில் முக்கிய பங்கு வகித்த கோபம் கொஸ்னி முபாரக்கின் ஆதரவாளரிடையே; இன்னமும் தணியாது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
வைத்தியசாலை தகவல்களின்படி 74 சடலங்கள் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் தனிப்பட்ட கோபங்களை சாதித்து படுகொலைகளை செய்யவும் இப்படியொரு கலவரத்தை வாய்ப்பாக பயன்படுத்தியிருக்க முடியும். எகிப்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் கடுமையான குரோதங்களை மக்கள் மத்தியில் வளர்த்துள்ளது. முற்று முழுதான சர்வாதிகார ஆட்சியில் இருந்த மக்களுக்கு ஜனநாயத்தைக் கற்பிப்பது பெரும் சிரமமாக உள்ளது. புதிதாக வந்துள்ள இஸ்லாமிய சகோதர அமைப்பு கட்சியும் ஸாரியார் கடும் சட்டங்கள் இல்லாமல் எகிப்து மக்களை நிர்வகிக்க முடியாது என்று கூறுகிறது. படுகொலைகளுக்கான விசாரணைகள் தொடர்கின்றன. இதுவரை 47 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். எகிப்திய உதைபந்தாட்ட சரித்தில் இல்லாத நாசச் செயல் இதுவென்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.