அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் கட்டிடத்தை அமெரிக்க காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
பிடிபடாமல் இருந்துவருபவர் ஸோகார் சர்னயேவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் செச்சன்ய இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
இவர் ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அப்பகுதியில் வாழ்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்திருந்தனர்.
சந்தேகநபர்களில் மற்றவர் நேற்றிரவு பொலிசாருடன் நடந்த துப்பாக்கி மோதலில் கொல்லப்பட்டிருந்தார். சர்னயெவ்வின் சகோதரான டமேரியன் இவர் என்று நம்பப்படுகிறது.
பாஸ்டன் மாரத்தன் போட்டியின் நிறைவுக் கோட்டுக்கு அருகே இருந்த இந்த இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்களை வியாழன் மாலை பொலிசார் வெளியிட்டனர்.
அதனையடுத்து கேம்பிரிஜ் என்ற இடத்தில் ஒரு கடையில் கொள்ளை நடந்தபோது இவர்களில் ஒருவர் அங்கும் காணப்பட்டிருந்தார்.
அங்கு அனுப்பப்பட்ட ஒரு பொலிஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, இருவரையும் பொலிசார் துரத்த ஆரம்பித்திருந்தனர்.
தப்பியோடிய சந்தேக நபர்கள் துப்பாக்கி முனையில், காரொன்றை உரிமையாளருடன் சேர்த்து கடத்திச் சென்றிருந்தனர்.
பின்னர், அவர்கள் கார் உரிமையாளரை விடுவித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரை நிறுத்துவதற்கு முன்னதாக அவர்கள் போலிசாருடன் துப்பாக்கிச் சண்டடையில் ஈடுபட்டதுடன், கைக்குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பின்னர், அவர்களைத் துரத்திச் சென்று சுட்டதிலேயே சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
அதிகாரி ஒருவர் இந்த துப்பாக்கிச் சண்டையில் மோசமாக காயமடைந்துள்ளார்.
கடந்த திங்களன்று பாஸ்டன் மாரத்தன் போட்டிகளில் நிறைவுக் கோட்டுக்கு அருகே இரண்டு குண்டுகள் வெடித்திருந்தன.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டும் நூற்று எழுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருந்தனர்.
BBC