யாழ் உதயன் செய்திதாள் நிறுவனத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களும்; கடற்படையினரும் இணைந்தே தீ வைத்திருக்கலாம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அமைச்சர் பசில் ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்க ராஜாங்க செயலகத்துக்கு அறிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ச, 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி தம்மை சந்தித்த போது இந்த தகவல் வெளியிடப்பட்டதாக ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம், தமிழ் ஆயுதக்குழுக்களான ஈபிடிபி மற்றும் கருணா ஆகியவை தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
இந்தநிலையில் அரசாங்கம், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கருணாவுக்கும், தமது உறுப்பினர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமாறு தெளிவான அறிவுறுத்தலை வழங்கியிருப்பதாக பசில் ராஜபக்ச ரொபட் ஓ பிளெக்கிடம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்களால் பிரச்சினைகள் ஏற்படுமாயின் அதனை டக்ளஸ் தேவானந்தாவும் கருணாவுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பசில் பிளெக்கிடம் சுட்டிக் காட்டியிருந்தார்.
இதேவேளை வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது, அரசாங்கம் தொடர்ந்தும் மக்களுக்கு உணவு விநியோகங்களை மேற்கொண்டதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.