வலி.வடக்கில் படைகளுக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை முதல் முழு வீச்சில் ஆரம்பமாகவுள்ளன. இதன் மூலம் அங்குள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளும் முழுமையாகப் பறிபோகும் என்று தெரிய வருகிறது.
இதுவரை விடுவிக்கப்படாத பகுதிகளுக்குள் அடங்கும் கிராம சேவையாளர் பிரிவுகளில் சுவீகரிக்கப்படும் தனியார் காணிகளுக்குரிய சுவீகரிப்பு அறிவித்தல்கள் கிராம சேவையாளர்களால் ஒட்டப்படவுள்ளன.
இராணுவப் பாதுகாப்புடன் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அழைத்துச் செல்லப்படும் கிராம சேவையாளர்கள், மாவட்டக் காணி மற்றும் காணி அபிவிருத்தி திணைக்களத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக வலி.வடக்குப் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்து 23 வருடங்கள் கடந்த நிலையிலும் அந்தப் பகுதி மக்கள் இன்னமும் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை.
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரிப் பல போராட்டங்களைச் சாத்வீக வழியில் முன்னெடுத்தனர். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.பிராந்திய காரியாலயம் திறந்த வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் ஊடாக வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் விடுவிக்கப்படாமலுள்ள 24 கிராமசேவையாளர் பிரிவுகளும் சுவீகரிக்கப்படப் போவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை மறுத்த காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர், மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கே பிராந்திய காரியாலயம் திறக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
ஆனாலும் காணி மற்றும் காணி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள்ளேயே யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் கோரிய தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்குரிய அறிவித்தல்கள் ஒட்டப்பட்டன.
வலி.வடக்கில் 24 கிராம சேவையாளர் பிரிவுகள் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமையால் அந்தப் பகுதிகளுக்குரிய சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்படாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலர் ஆ.சிவசுவாமி, வலி.வடக்கு மற்றும் கோப்பாய் பிரதேச செயலர்கள், இராணுவ அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர், உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் அடங்கும் கிராம சேவையாளர்களுக்கு விசேட அறிவித்தல்கள் யாழ்.மாவட்ட செயலரால் விடுக்கப்பட்டுள்ள தாகத் தெரியவருகிறது.
நாளை திங்கட்கிழமை கிராம சேவையாளர்கள் காணி சுவீகரிப்பு மேற்கொள்வதற்காக இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
அங்கு தனியார் காணிகள் ஒவ்வொன்றிலும் காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்படவுள்ளன.
அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியேயும் காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல்கள் மக்கள் பார்வைக்காக ஒட்டப்படவுள்ளன.
இந்த அறிவித்தல்கள், யாழ்.மாவட்டக் காணி அலுவலகத்தினால் பிரத்தியேக இடமொன்றில் வைத்து அச்சிடப்பட்டு வருவதாகவும் இந்த நடவடிக்கைகளுக்காக 30 லட்சம் ரூபா வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்ட பின்னர், மக்களை இராணுவப் பாதுகாப்பு டன் அங்கு அனுமதிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட அலுவலர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளப் பலமுறை முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.