Search

விஜயகாந்தின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர் ஜெகவீரபாண்டியன், சென்னை மாநகராட்சி தேமுதிக மேயர் வேட்பாளர் வேல்முருகன், விஜயகாந்தின் முன்னாள் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட 1025 பேர் அதிமுகவில் இணைந்தனர். தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா காலை 11.36 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஜெயலலிதா முன்னிலையில் தேமுதிகவின் தேர்தல் பிரிவு செயலாளர் ஜெகவீரபாண்டியன், தொழிற்சங்க பேரவை தலைவரும் நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக தேமுதிக சார்பில் போட்டியிட்ட கோ.வேல்முருகன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளார் ஜெய்சன் ஜேக்கப், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பாரி மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முன்னாள் நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர், நடிகை குயிலி மற்றும் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1025 பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்களில் பலர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உறுப்பினர் அட்டை வழங்கி பேசும்போது, ‘அதிமுகவில் இணைந்துள்ள உங்கள் அனைவரையும் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அன்புடன் வரவேற்கிறேன். அதிலும் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளதை பார்க்கும்போது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். எத்தகைய நம்பிக்கையுடன் அதிமுகவில் இணைய வந்துள்ளீர்களோ அந்த நம்பிக்கை வீண்போகாது. உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் கலைராஜன், செந்தமிழன், வெற்றிவேல், புரசை கிருஷ்ணன், பொன்னையன், பி.எச்.பாண்டியன், தம்பிதுரை, பாலகங்கா, ரபி பெர்னார்ட் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *