இலங்கையில் கொரோனா பரவலின் 2வது அலை சமூகப் பரவல் எனும் அபாயகட்டத்தை நோக்கி நகர்ந்துவருவதை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் சமூகப்பரப்பில் 39 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் உள்ளிட்ட 57 புதிய தொற்றாளர்கள் நேற்றைய தினம் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா 2வது அலையின் தோற்றுவாய்!
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்த பின்னர் வெலிக்கடை சிறைக்கு திரும்பிய கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான தோற்றுவாயாக அமைந்துவிட்டது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
வெலிக்கடை சிறையில் இருந்து கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு பின்நோக்கி சென்ற கொரோனா பரிசோதனையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வெளிப்பட்டிருந்தது. முற்றுப்புள்ளி வைக்க முடியாத கையறு நிலைக்கு கொரோனா தொற்று சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.
வெலிசறை கடற்படை முகாம் தொற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையும்!
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு தொற்று உறுதியானதும் அங்கிருந்து விடுமுறையில் சென்றவர்களும் ஏனைய இடங்களுக்கு மாறதலாகி சென்றவர்களும் திரும்ப அழைக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
ஒரு கடற்படை சிப்பாயில் தொடங்கிய கெரோனா பரவல் 900 கடந்த நிலையில் இன்றும் முடிவுறாத நிலையில் உயிர்புடன் இருப்பதை மறுப்பதற்கில்லை. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முழு மூச்சான முனைப்புகளுக்கு மத்தியில் அவ்விடயம் சமூகப் பரவல் நிலையை அடையாது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்றைய அபாய நிலை!
ஆனால் இன்று அப்போதைய கட்டுப்பாடு நிலை தளர்த்தப்பட்டு நாடு முழுவதும் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பிவிட்ட நிலையில் கந்தகாடு தொற்று பரவலானது மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கந்தகாட்டில் பணிபுரிந்த 100 இற்கு மேற்பட்டவர்கள் விடுமுறையில் தத்தமது வீடுகளுக்கு சென்று சமூகத்தோடு இரண்டறக்கலந்த வாழ்வில் கரைந்து போயிருந்தனர். அத்துடன் பலர் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளது.
கந்தகாடு முகாமில் இரண்டாவது ஆலோகர் ஒருவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவரது பிள்ளைகளில் ஒருவருடன் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 70 சிறுவர்கள் உள்ளிட்ட 300 பேர் முதல்கட்டமாக இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் தொற்று உறுதியாகும்பட்சத்தில் அவரில் இருந்து புதிய தொடர்புவட்டம் விரிவடையும்.
அதுமாத்திரமல்லாமல் இவ்வாறு தொற்று உறுதியான ஆலோகர் கவென திசாவெவ இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரி என தற்போது தெரிய வந்துள்ளது. அவ்வாறு எனில் குறித்த இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரது நிலையும் அங்கிருந்த குறித்த காலப்பகுதாயில் விடுமுறையிலோஇ பிற காரணங்களை முன்னிட்டோ வெளியில் சென்றவர்கள் மூலம் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என மேலும் புதிய வழித்தடத்தில் விரிவாக்கம் அடையும் ஆபத்து உள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய 100 இற்கு மேற்பட்டவர்களில் தொற்று உறுதியான இருவர் முலமே இந்த நிலையெனில் மேலும் தொற்று உறுதியாகும் நபர்கள் மூலம் ஏற்படும் அச்சுறுத்தலானது மிகப்பெரும் அபாயநிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் என்ற அச்சம் பலதரப்பிலும் ஏற்பட்டுள்ளது.
நேற்யை தினம் தொற்று உறுதியானவர்கள் – 57 பேர்!
நேற்றைய தினம் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ள மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புபட்டு தொற்று உறுதியானவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர்களில் 39 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதைவிட குவைத்தில் இருந்து வருகைதந்த ஒருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 4 பேரும் என வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 5 பேருக்கும் தொற்று உறுதியாகியிருந்தது.
இலங்கையில் கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை – 2511!
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2454 இல் இருந்து 2511 ஆக அதிகரித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொற்று – 355!
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்கனவே 342 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் (ஜூலை-11) மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படதை அடுத்து மொத்த தொற்று 355 ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர அங்கு ஆலோகர்களாக கடமையாற்றிய மாரவில பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் மற்றும் ராஜாங்கணையைச் சேர்ந்த இராணுவ அதிகாரி என இருவர்க்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கந்தகாடு தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த தொற்றாளர்கள் – 39!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்த்துடன் தொடர்புட்டு தொற்று உறுதியானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த 39 பேருக்கு இதுவரை தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது.
குணமடைந்தவர்களது எண்ணிக்கை – 1980!
இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களது எண்ணிக்கை 1980 ஆக உள்ளது.
தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்கள் – 520!
நேற்றைய தினம் தொற்று உறுதியான 57 பேருடன் சேர்த்து தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு – 11!
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.