கோவை : கோவையில், சமீப காலமாக நாள்தோறும் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடரும் மின்வெட்டை கண்டித்து 40 ஆயிரம் தொழிற்சாலைகள் நேற்று ஒரு நாள் மூடப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலை மறியல், கஞ்சி வினியோகம் என அடுத்தடுத்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கடந்த ஒரு வாரமாக மின்வெட்டு மேலும் மோசமடைந்ததால் கோவையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக தொழில் முனைவோர் சாலை மறியல், மின் அலுவலகம் முற்றுகை, நிறுவனங்களில் கருப்புக் கொடியேற்றம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் உச்சகட்டமாக கோவை மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடிசியா) தலைமையில் 30க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் இணைந்து நேற்று ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் மற்றும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
கோவையில் 90 சதவீத தொழிற்சாலைகள் நேற்று காலை 6 மணியில் இருந்தே இயங்கவில்லை. இஞ்ஜினியரிங், வார்ப்படம், மின் மோட்டார், பம்ப்செட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் லேத் பட்டறைகள் என 40 ஆயிரம் தொழிற்சாலைகள் கதவடைப்பு செய்யப்பட்டன.
காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன் கருப்புக்கொடிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம், கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்தது. 30க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சாலை மறியல்: ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே மறியலில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் காந்திபுரம் பகுதி காலை முதல் மதியம் 1 மணி வரை பதற்றமாக காணப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கஞ்சி காய்ச்சி வினியோகம்: ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் திடீரென ஒரு டிரம்மில் கஞ்சி கொண்டு வந்தனர். அதை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வினியோகித்தனர்.இதைப் பார்த்த போலீசார், கஞ்சிக் குடங்களை பறிமுதல் செய்ய முயன்றனர். இதில் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கஞ்சி வைத்திருந்த டிரம்மை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வர்த்தக நிறுவனங்கள் மூடல்: மின்வெட்டை கண்டித்து தொழில் துறையினர் மேற்கொண்ட கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு வர்த்தக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. காட்டூர், நஞ்சப்பா சாலை, கடலைக்கார சந்து, பாப்பநாயக்கன்பாளையம், கணபதி, பீளமேடு ஆகிய பகுதிகளில் தொழில்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், மின் சாதனங்கள் சப்ளை செய்யும் கடைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இங்குள்ள 2500க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.